தாரமங்கலத்தில், தொழிலாளி அடித்துக்கொலை

தாரமங்கலத்தில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2020-08-03 23:00 GMT
தாரமங்கலம், 

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஒரு ஓட்டல் வாசலில் நேற்று காலை முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ஒருவர் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் ஓமலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கர், தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் பிணமாக கிடந்தவர் தாரமங்கலம் அருகே உள்ள துட்டம்பட்டி ஆயாமரத்தூர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சுவேந்திரன் (வயது 43) என்பதும், அவர் கட்டை அல்லது கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

சுவேந்திரனுக்கு திருமணம் ஆகி சுமதி என்ற மனைவி, ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு, குழந்தைகளுடன் தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். அவர் மட்டும் தனியாக வசித்து வந்த நிலையில், தற்போது அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை எதற்காக கொலை செய்தனர்?, கொலைக்கான காரணம் என்ன? கொலை செய்தது யார்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை தொடர்பாக அவரது மனைவி உள்பட பலரிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தாரமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்