பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஊரடங்கினால் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா
ஊரடங்கினால் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஆடி பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது.
பெரம்பலூர்,
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். மேலும் ஆடி பெருக்கு விழாவினை ஆற்றங்கரைகளை ஓட்டி வாழும் மக்களே வெகுவிமர்சையாக கொண்டாடுவார்கள். அதிலும் காவிரி ஆற்றங்கறை மக்கள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் காவிரி ஆறு கிடையாது என்பதால் கோவில்களில் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கினால் தற்போது நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சிறிய கோவில்களையும், கிராமப்புற பகுதிகளில் ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்துக்குள் வரும் கோவில்களையும் மட்டும் திறந்து வழிபாடு நடத்தலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்கள் இன்னும் திறக்கப்படவில்லை.
ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு பெரம்பலூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கினால் கோவிலில் நடை திறக்கப்படாததால் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் கோவிலின் உள்ளே வழக்கம் போல் பூஜைகள் நடைபெற்றன. உள்ளூர் பக்தர்கள், புதுமண தம்பதியினர் கோவிலின் வெளியே நின்று சூடம் ஏற்றி அம்மனை பயபக்தியுடன் வழிபட்டதை காணமுடிந்தது.
இதேபோல் பெரம்பலூரில் மதனகோபாலசுவாமி கோவிலின் முன்புள்ள கம்பம் ஆஞ்சநேயருக்கு ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு கடந்த 21 ஆண்டுகளாக இளைஞர்கள் திருச்சியில் ஓடும் காவிரி தீர்த்தத்தை குடங்களில் நிரப்பி, ஸ்ரீரங்கத்தில் இருந்து பாதயாத்திரையாக பெரம்பலூருக்கு எடுத்து வந்து ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கம்பம் ஆஞ்சநேயர் கோவிலில் ஊரடங்கினால் ஆடிப்பெருக்கு விழா ரத்து செய்யப்பட்டதால், இளைஞர்கள் காவிரியில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வராமல், கம்பம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு மட்டும் நடந்தது. பெரம்பலூர் துறைமங்கலம் 10-வது வார்டில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு ஆண்டுதோறும் பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கினால் கோவிலில் சிறப்பு பூஜை மட்டும் நடந்தது. கொரோனா ஊரடங்கினால் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் தமிழ்நாடு சுற்றுலா தலமான வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்பு கொள்ளிடம் ஆறு உள்ளது. மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடிவரும் கொள்ளிடம் ஆறு கோவிலின் முன்பு வரும்போது தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓட ஆரம்பிக்கும். இது இந்த கோவிலுக்கான மிக சிறப்பம்சம். இந்த கோவில் காசிக்கு அடுத்ததாகவும் போற்றப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு புதுக்கோட்டை, செம்பியக்குடி, குலமாணிக்கம், இலந்தைகூடம், கண்டிராதித்தம், அரண்மணைகுறிச்சி, பாளயபாடி, அண்ணிமங்கலம், மஞ்சமேடு, திருமானூர் உள்ளிட்ட பகுதியை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தை சேர்ந்த புதுமண தம்பதிகள் வருகை தந்திருந்தனர்.
அவர்கள் கொள்ளிடம் ஆற்றில் குளித்துவிட்டு மணலில் அமர்ந்து காப்பரிசி படையல் போட்டு, தேங்காய், பழம், வளையல், மஞ்சள்கயிறு உள்ளிட்ட பொருட்கள் வைத்து சாமி கும்பிட்டு மனைவிமார்கள் கட்டியிருக்கும் தாலியை பிரித்து புது மஞ்சள் கயிற்றுடன் கோர்த்து கணவன்மார்கள் அவர்கள் கழுத்தில் மீண்டும் கட்டி விட்டனர். பின் படையல் போட்ட பொருட்களை ஆற்றில் வரும் நீரில் விட்டு வழிபாடு செய்தனர். மேலும் இப்பகுதியை சுற்றியுள்ள கிராமத்தில் உள்ள சிறுவர்கள் மரத்தாலான தேர் செய்து அதில் சாமி படங்களை வைத்து வழிபட்டு அவர்களின் கிராமத்திலிருந்து நண்பர்களோடு சேர்ந்து தேரை இழுத்து வந்து இந்த கோவிலில் வழிபாடு செய்து தேரை ஆற்றில் வரும் நீரோடு விட்டு வழிபாடு நடத்திச்சென்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு நடைபெற்று கொண்டிருப்பதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்று குறைவாகவே கூட்டம் காணப்பட்டது. அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள அணைக்கரை கொள்ளிடம் கீழணையில் நேற்று முழு ஊரடங்கு என்பதால், புதுமண தம்பதிகள் நேற்று காலை முதல் மாலை வரை கீழணையில் ஆற்றங்கரையில் பூஜைகள் நடத்தி வழிபாடு செய்தனர். தா.பழூர் பகுதியில் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்ட போதிலும் தா. பழூர் பகுதி கொள்ளிடம் ஆற்றில் புதுமண தம்பதிகள் புதுத்தாலி கயிறு அணிந்து ஆடிப்பெருக்கை கொண்டாடினர். இதேபோல் உடையார்பாளை யம், செந்துறை உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆடிப் பெருக்கையொட்டி பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.