கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிவது அவசியம் - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தல்

பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தால் கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தினார்.

Update: 2020-08-02 21:30 GMT
ஆறுமுகநேரி,

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை மற்றும் தூத்துக்குடி மாவட்ட போலீசார் இணைந்து காயல்பட்டினம் கடற்கரை சாலையில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடத்தின. பேரவை தலைவர் அபுல்ஹஸன் கலாமி தலைமை தாங்கினார். முகமது அபுபக்கர், எம்.எல்.ஏ., பேரவை அவைத்தலைவர் பாதுல் அஸ்ஹப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரவை துணைச்செயலாளர் நிவாஷ் வரவேற்று பேசினா். முகாமில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு முக்கவசம், கபசுர குடிநீர் மற்றும் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:- தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் அரசின் முயற்சி மட்டும் போதாது. பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா தொற்றை முழுமையாக வெல்லமுடியும்.

உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தல்படி, பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தால் கொரோனா தொற்றிலிருந்து 90 சதவீதம் தப்பிக்கலாம். இதை பின்பற்றி தூத்துக்குடி மாவட்ட மக்கள் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது கட்டாயம். அதேபோன்று பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும், வெளியில் இருந்து வீட்டிற்குள் செல்லும் போதும் சோப்பு போட்டு கைகளை நன்றாக கழுவ வேண்டும். பொது இடங்களுக்கு வரும்போது சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். சிறுநீரக கோளாறு, சர்க்கரை நோய், இருதய நோய் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டும்.

மாவட்டம் முழுவதும் போலீசார் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது தீர்வல்ல. கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க பொதுமக்கள் அரசின் விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பேரவை செயலாளர் வாவூசம்சுதீன் நன்றி கூறினார். பேரவை ஒருங்கிணைப்பாளர் காயல் அமானுல்லா தொகுத்து வழங்கினார். முகாமில் அனைத்து ஜமாத் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட மணப்பாடு பகுதியை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது திருச்செந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பாரத் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்