கொரோனா நிவாரணமாக ரூ.7,500 வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கொரோனா நிவாரணமாக மாதம் ரூ.7,500 வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-07-29 05:44 GMT
திருவாரூர்,

கொரோனா வைரஸ் தொற்று பேரிடர் காரணமாக டெல்டா மாவட்டங்களில் விவசாய தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே கிராமப்புற வறுமை மற்றும் வேலையின்மையை போக்கிட 100 நாள் வேலை திட்டத்்தை 200 நாட்களாக உயர்த்தி தினக்கூலி ரூ.600 வழங்க வேண்டும்.

கொரோனா நிவாரணமாக ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். வரும் டிசம்பர் மாதம் வரை ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.கலைமணி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் இடும்பையன், நகர செயலாளர் பாலசுப்ரமணியன், நிர்வாகி மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் குமாரராஜா தலைமை தாங்கினார். நகர செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர்கள் ரவி, முருகதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரகுராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் காரல்மார்க்ஸ், கதிரேசன், மாணவர் சங்க மாவட்ட பொறுப்பாளர் பிரகாஷ், ஒன்றிய தலைவர் ஜீவானந்தம், நகர தலைவர் மருதாச்சலம், ஒன்றிய குழு உறுப்பினர் தங்கராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்