போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை: இருவழிச்சாலையாக மாற்றப்படும் நாகர்கோவில் கோட்டார் பகுதி கடைகள், வீடுகள் இடிக்கும் பணி தீவிரம்

போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் நாகர்கோவில் கோட்டார் பகுதி இருவழிச்சாலையாக மாற்றப்படுகிறது. அதற்காக கடைகள், வீடுகள் இடிக்கும் பணி தீவிரமாக நடக்கின்றன.

Update: 2020-07-29 04:12 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் மிக முக்கிய இடமாக விளங்குவது கோட்டார் ஆகும். இந்த பகுதியில் சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை கையகப்படுத்துதல், சாலை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டன.

மேலும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் விரைவாக எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கட்டிடங்கள், வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன.

மாநகராட்சி அதிகாரிகள்

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, அவர்கள் கூறியதாவது:-

கோட்டாரில் சாலை விரிவாக்க பணிக்காக வியாபாரிகள் தானாக முன்வந்து இடம் அளித்துள்ளனர். வியாபாரிகளின் ஒத்துழைப்பின் மூலம் கோட்டார் போலீஸ் நிலையம் முதல் கவிமணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை சாலை விரிவாக்க பணிகள் முதல் கட்டமாக தொடங்கி உள்ளது.

அதில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட இடத்தில் மட்டும் அலங்கார தரைக்கற்கள் பதிக்கும் பணி நடந்தன. இந்த சாலை தற்போது அகலமாக காட்சி அளிக்கிறது.

50 அடி அகலத்தில்...

தொடர்ந்து கோட்டார் சவேரியார் ஆலய சந்திப்பில் இருந்து செட்டிக்குளம் செல்லும் சாலை வரை 50 அடி அகலத்தில் சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதற்காக 50-க்கும் மேற்பட்ட கடைகளின் முன்பகுதி, சில வீடுகளின் முன்பகுதி இடித்து அகற்றப்பட்டன. ஏற்கனவே கோட்டார் போலீஸ் நிலையத்தில் இருந்து சவேரியார் ஆலயம், சவேரியார் ஆலய சந்திப்பில் இருந்து செட்டிகுளம் சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக உள்ளது. சாலை விரிவாக்க பணிகள் மூலம் ஒருவழி பாதையானது, இருவழி பாதையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் 5 அல்லது 6 மாதத்துக்குள் முடிவடையும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

மேலும் செய்திகள்