மதுரை முன்னாள் தி.மு.க. மண்டல தலைவர் வி.கே.குருசாமி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு 8 வாகனங்களையும் சேதப்படுத்திய கும்பல்
மதுரை தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மேலும் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் உள்பட 8 வாகனங்களை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மதுரை,
மதுரை கீரைத்துறை, கீழ்மதுரை ரெயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியை சேர்ந்தவர் வி.கே.குருசாமி, தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டிக்கும் தேர்தல் தொடர்பான முன்விரோதம் இருந்து வந்தது.
இது தொடர்பான மோதலில், கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை இருதரப்பிலும் மாறி, மாறி சுமார் 15-க்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். சில மாதங்களுககு முன்பு அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்ததாக வி.கே.குருசாமி, அவரது மகன் மணி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அவர்கள் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
பெட்ரோல் குண்டு வீச்சு
இந்த நிலையில் நேற்று அதிகாலை நேரத்தில் 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் கொண்ட கும்பல் வி.கே.குருசாமி வீட்டிற்கு வந்தது. அந்த கும்பல் திடீரென்று கையில் வைத்திருந்த 4 பெட்ரோல் குண்டை வீட்டின் மீது வீசியது. இதில் 2 குண்டுகள் வெடித்து வாசல் கதவு மற்றும் அங்கிருந்த பகுதியில் தீப்பிடித்தது. ஆனாலும் வீட்டின் உள்ளே இருந்து யாரும் வெளியே வரவில்லை. எனவே ஆத்திரத்தில் அந்த கும்பல் ஆயுதங்களால் வீட்டின் கதவு, ஜன்னல் கண்ணாடி ஆகியவற்றை சேதப்படுத்தியது.
8 வாகனங்கள் சேதம்
மேலும் அந்த கும்பல் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள், 2 ஆட்டோ, 2 வேன், 2 மோட்டார் சைக்கிள் என 8 வாகனங்களையும் அடித்து சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி விட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதி கலவரம் ஏற்பட்டது போல் காட்சி அளித்தது. தகவல் அறிந்து கீரைத்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். குண்டு வீச்சு சம்பவம் நடந்த போது அந்த வீட்டின் உள்ளே வி.கே.குருசாமியின் மனைவி, மகள் விஜயலட்சுமி ஆகியோர் இருந்துள்ளனர். அவர்கள் பயந்து வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
உறவினர் இறப்பு
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சுமார் 20 ஆண்டுகளாக இருதரப்பினரிடையே தகராறு நடந்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் நெருங்கிய உறவினர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் எதிர் தரப்பை சேர்ந்தவர்கள் வி.கே.குருசாமி மற்றும் அவரது மகனை கொலை செய்ய பலமுறை முயன்றுள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் வி.கே.குருசாமியின் உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வி.கே.குருசாமி வந்து இருக்கலாம் எனவும், அவர் தனது வீட்டில் தங்கியிருப்பார் என்றும் நினைத்து எதிர்தரப்பினர் இந்த சம்பவத்தை நிகழ்த்தி உள்ளனர்.
பிறந்த நாள் பரிசு
மேலும் நேற்று ராஜபாண்டி தரப்பைச் சேர்ந்த ரவுடி வெள்ளை காளிக்கு பிறந்த நாள். எனவே அவருக்கு பிறந்த நாள் பரிசாக அன்றைய தினம் வி.கே.குருசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுவதற்காக இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்பதும் விசாரணையில் தெரியவருகிறது.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் இந்த சம்பவம் முழுவதும் பதிவாகி உள்ளது. அதை வைத்து சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து கீரைத்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.