அரசு ஊழியர்கள் சம்பளத்தில் ஒரு பைசா கூட பிடித்தம் இல்லை: சொந்த ஊரில் தான் பணியாற்றுவோம் என்றால் நிர்வாகம் ஸ்தம்பித்து விடும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து

சொந்த ஊரில்தான் பணியாற்றுவோம் என்றால் நிர்வாகம் ஸ்தம்பித்து விடும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-29 02:19 GMT
மதுரை, 

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் ராதானூரை சேர்ந்தவர் வாசு. இவர் தனது சொந்த ஊரில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார். திடீரென அவர் ஓடைக்கல் எனும் கிராமத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தன்னை மீண்டும் சொந்த ஊருக்கு இடமாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மனுதாரர் தன்னை மீண்டும் சொந்த ஊருக்கு இடமாற்றம் செய்யுமாறு கேட்பதற்கான சரியான காரணத்தை தெரிவிக்கவில்லை. ஓடைக்கல் கிராமத்தில் வசிக்கும் பெரும்பான்மை சமுதாயத்தினர் தனக்கு பல்வேறு தொல்லைகளை கொடுப்பதாக தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் எந்த புகாரும் இதுவரை தெரிவிக்கவில்லை. அதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை.

மனுதாரர் கூறும்காரணத்தை ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் தமிழ்நாட்டில் வேற்று சமுதாயத்தினர் வசிக்கும் பகுதியில்எந்த ஒரு அரசு ஊழியரும் நுழைய முடியாது. இவரை போன்றவர்கள் அரசு வேலையை தங்களின் வீட்டு வாசலுக்கு வந்து தர வேண்டும் என நினைக்கின்றனர். ஒவ்வொரு அரசு ஊழியரும் தங்களின் சொந்த ஊரிலோ, சொந்த நகரத்திலோ, வசிப்பிடத்துக்கு அருகிலோ வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக முன்வைத்தால், அரசு நிர்வாகம் செயல்படாமல் ஸ்தம்பித்து விடும். தற்போதைய கொரோனா பாதிப்பு காலங்களிலும் எந்த தடையும் இன்றி அரசுப்பணியாளர்கள் தங்களின் வருமானத்தை பெற்று அனுபவிக்கிறார்கள்.

பிடித்தம் செய்ய வில்லை

ஆனால் தொழில் அதிபர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தினக்கூலிகள் கடுமையான பாதிப்பை சந்தித்து உள்ளனர்.

தினக்கூலி, பணி பாதுகாப்பற்ற வேலையை செய்பவர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் கடன், நிதியுதவி போன்ற சலுகைகளை தர முன்வந்துள்ளன. இதற்காக அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பைசா கூட பிடித்தம் செய்யப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில் அரசு ஊழியர்கள் தாங்களாக முன்வந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட முன்வர வேண்டும்.

அரசு ஊழியர்கள் தங்களது குடும்பத்தினர், உறவினர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை போல, சமுதாயத்தை பற்றி சிந்திப்பது அவசியம். இதுபோன்ற கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடாது. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்