புதுவையில் தொற்று கிடுகிடு உயர்வு கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது

புதுவையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 141 பேர் பாதிக்கப்பட்டனர். என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

Update: 2020-07-28 21:29 GMT
புதுச்சேரி,

புதுவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

சுகாதார துறை அதிர்ச்சி

இதன்பயனாக தொடக்கத்தில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் இருந்து வந்தது. இந்த

நிலையில் பல்வேறு தளர்வுகளுடன் 5-ம்கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பிறகும் சென்னையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து வந்தவர்களாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த தொற்று பாதிப்பு கடுமையாக அதிகரித்தது.

தற்போது அதிகம் பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருவதும் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. தொற்று பாதித்தவர்களுக்கு கதிர்காமம் கொரோனா சிறப்பு மருத்துவமனை, அரசு மருத்துவமனை, ஜிப்மரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தினந்தோறும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே இருப்பது சுகாதார துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் மோகன்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

141 பேருக்கு தொற்று

மாநிலத்தில் நேற்று 874 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 141 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களை சேர்த்து மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,011 ஆக உள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 86 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 40 பேர் ஜிப்மரிலும், 4 பேர் கொரோனா கேர் சென்டரிலும், 11 பேர் ஏனாமிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,782 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் குணமடைந்தவர்கள் 62 பேர். கதிர்காமம் மருத்துவமனை, ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டவர்களில் 60 பேர் கொரோனா கேர் சென்டருக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போது 1,182 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் தவிர புதுவையில் 132, ஏனாமில் 11 என 143 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 36,288 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 32,837 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளன. 240 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன.

4 பேர் பலி

புதுவை கோரிமேடு இந்திரா நகர் விரிவாக்கம், விவேகானந்தன் தெருவை சேர்ந்த 78 வயது முதியவர் கடந்த 21-ந் தேதி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

கதிர்காமம் சுப்ரமணியர் கோவில் தெருவை சேர்ந்த 54 வயது ஆண் கடந்த 26-ந் தேதி இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை அவர் உயிரிழந்தார்.

முதலியார்பேட்டை உழந்தைகீரப்பாளையம் அன்சாரி துரைசாமி நகரை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் பொதுச் செயலாளர் பாலன் தொற்று உறுதியான நிலையில் கடந்த 23-ந் தேதி தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். ஏனாமை சேர்ந்த ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த வகையில் மேலும் 4 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இவர்களை சேர்த்து புதுவை மாநிலத்தில் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.56 சதவீதமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்