வேலூரில் கொரோனாவுக்கு 4 பேர் பலி

வேலூரில் கொரோனாவுக்கு 4 பேர் பலியானார்கள்.

Update: 2020-07-28 17:32 GMT
வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதேபோல் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் கூடி கொண்டே போகிறது.

இந்த நிலையில் நேற்று கொரோனாவுக்கு 4 பேர் பலியானார்கள். அதன் விவரம் வருமாறு:-

குடியாத்தம் பெரும்பாடி பகுதியை சேர்ந்தவர் பீமாராவ் (வயது 74). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பீமாராவ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோல குடியாத்தம் டவுன் டி.கே.எம்.நகரை சேர்ந்த ஜெயராமன் (51) என்பவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. அதைத் தொடர்ந்து அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் ஜெயராமன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

குடியாத்தம் தாலுகாவில் இதுவரை கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்து உள்ளது.

வேலூரில் 2 பேர் பலி

வேலூர் காந்திநகரை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 80). இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று காலை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் மாலை 3 மணியளவில் பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பைபாஸ் ரோட்டை சேர்ந்த இருளப்பன் மனைவி ரத்தினம் (80) என்பவர் கொரோனா சிகிச்சைக்காக கடந்த 26-ந் தேதி இதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரின் உடல்நிலையை டாக்டர்கள் தீவிரமாக கவனித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை மூதாட்டிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிறிதுநேரத்தில் பலனின்றி உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து 2 பேரின் உடல்களும் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்