பெரம்பலூரில் 4 போலீசார் உள்பட 21 பேருக்கு கொரோனா; போலீஸ் நிலையம் மூடல் அரியலூரில் 48 பேர் பாதிப்பு
பெரம்பலூரில் 4 போலீசார் உள்பட 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அந்த போலீஸ் நிலையம் மூடப்பட்டுள்ளது. இதேபோல் அரியலூரில் நேற்று ஒரே நாளில் 48 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 343 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதில் குணமடைந்த 227 பேர் வெவ்வேறு தேதிகளில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த சித்த மருத்துவர் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். 112 பேர் பெரம்பலூர், திருச்சி, சேலம் ஆகிய மாவட்ட அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பெரம்பலூரில் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்துவரும் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 ஏட்டுகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து போலீஸ் நிலையம் 3 நாளைக்கு மூடப்பட்டது. பெரம்பலூர் கடைவீதியில் உள்ள போக்குவரத்து டவுன் போலீஸ் நிலையத்தில் தற்காலிக போலீஸ் நிலையம் இன்று (செவ்வாய்கிழமை) முதல் 2 நாட்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நகராட்சி ஊழியர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால் நகராட்சி அலுவலகமும் மூடப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை சேர்ப்பிக்க தபால் பெட்டி நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனை
பெரம்பலூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், நகராட்சி ஊழியர் உள்பட 18 பேர், குரும்பலூர், களரம்பட்டி, எறையூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் 3 பேர் என மொத்தம் 21 பேருக்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 6 பேர் திருச்சி அரசு மருத்துவமனையிலும், மீதமுள்ள 15 பேர் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேற்கண்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களது குடியிருப்புப் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, சுகாதாரத் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அரியலூரில் 48 பேர்
அரியலூரில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் அரியலூர், செந்துறை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 48 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் அரியலூர், திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், சேலம், விருத்தாச்சலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் அந்ததந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 875 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.