அவசர சட்டங்களை எதிர்த்து 26 ஆயிரம் வீடுகளில் விவசாயிகள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
அவசர சட்டங்களை எதிர்த்து சேலத்தில் 26 ஆயிரம் வீடுகளில் விவசாயிகள் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்,
தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து நெருக்கடியில் உள்ளனர். இந்த நிலையில், மின்சார திருத்தச்சட்டம், அத்தியாவசிய பொருட்கள் அவசர திருத்த சட்டம், வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இதனால் விவசாயிகளின் விரோத சட்டங்களை எதிர்த்து கையெழுத்து இயக்கமும், தமிழகம் முழுவதும் வீடுகளில் கருப்புகொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று மத்திய அரசின் அவசர சட்டங்களை எதிர்த்து தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாய நிலத்தில் போராட்டம்
மேச்சேரியில் விவசாயிகள் சங்க தலைவர் ராமமூர்த்தி தலைமையில் துணைத்தலைவர் தங்கவேலு மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல் மேச்சேரி அடுத்த ஆலமரத்தூர், மல்லியகுந்தம், கச்சராயனூர் உள்ளிட்ட பகுதிகளிலும், நங்கவள்ளி, வாழப்பாடி, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் 26 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளில் கருப்புகொடி ஏற்றி விவசாயிகள் மத்திய அரசை கண்டித்தும், அவசர சட்டங்களை திரும்பப் பெறக்கோரியும் கோஷமிட்டனர்.
சேலம் உத்தமசோழபுரம் அருகே பூலாவரி பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில், 8 வழிச்சாலை ஒருங்கிணைப்பு சங்கத்தினர் கையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். இதற்கு ஒருங்கிணைப்பாளர் மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். இது குறித்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், இந்த புதிய சட்ட திருத்தங்களால், விவசாயிகளுக்கு பல வகையில் பாதிப்பு ஏற்படும். அதே போன்று சுற்றுச்சூழல் மாசு ஏற்படும். எனவே புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும், புதிய சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் போராட்டம் நடத்தி உள்ளோம் என்றனர்.
கூடமலை
கெங்கவல்லி அருகே கூடமலையில் களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் தேசிய மனித உரிமை பாதுகாவலர் கூட்டமைப்பு மாவட்ட அமைப்பாளர் ராமு, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு அமைப்பாளர் ஜெகதாம்பால், களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்க பொறுப்பாளர் அங்காயி, தலைவர் விஜியா உள்பட கலந்து கொண்டனர். சேலம் கோட்டை பகுதியில் த.மு.மு.க. நிர்வாகி ஒருவர், விவசாயிகளுக்கு ஆதரவாக தனது வீட்டில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டார்.