குமரியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ. பாதிப்பு நாகர்கோவில் தொகுதி சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.வுக்கும் கொரோனா அரசியல் பிரமுகர்கள் கலக்கம்
நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் குமரியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருடன் தொடர்பில் இருந்த அரசியல் பிரமுகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
நாகர்கோவில்,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. தடுப்பு நடவடிக்கை எடுத்தாலும் கொரோனா பாதிப்பின் வீரியம் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்த கொரோனா முன்கள பணியாளர்களையும் விட்டு வைக்கவில்லை. டாக்டர்கள், நர்சுகள், போலீசார் என அனைவரையும் தாக்கி உள்ளது.
மேலும் ஒரு எம்.எல்.ஏ.க்கு தொற்று
இந்த நிலையில் நிவாரணம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வரும் மக்கள் பிரதிநிதிகளையும் கொரோனா தாக்கி வருகிறது. இதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.வான ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். பின்னர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் என பலரும் தொற்றுக்கு ஆளானார்கள். இதில் பலர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி விட்டனர். சிலர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.
இதற்கிடையே நேற்றுமுன்தினம் குமரி மாவட்டத்தை சேர்ந்த கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ராஜேஷ்குமார் கொரோனா தொற்றுக்கு ஆளானார். அவர் உடனடியாக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரையும் சேர்த்து தமிழகத்தில் 20 எம்.எல்.ஏ.க்கள் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ. கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-
சுரேஷ்ராஜன்
நாகர்கோவிலில் தி.மு.க. நிர்வாகிகள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதாவது மாநகர செயலாளர் மகேஷ் மற்றும் கலை இலக்கிய பிரிவு நிர்வாகி தில்லைசெல்வன் உள்ளிட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டது. அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மின் கட்டண உயர்வை கண்டித்து குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சுரேஷ்ராஜன் வீட்டு முன் நடந்த போராட்டத்தில் பங்கேற்றனர். அதன்பிறகு ஓரிரு தினங்களிலேயே அவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால் அவர்களுடன் தொடர்பில் இருந்த சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., அவருடைய டிரைவர் உள்பட 6 பேர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.வுக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பரிசோதனை முடிவு நேற்று மாலை வெளியானது. அதில், சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே அவர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயது 57. தொற்று ஏற்பட்ட சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.வுக்கு சளி தொந்தரவு இருந்ததாக தெரிகிறது. சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.வை தவிர மற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை.
பரவியது எப்படி?
தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கடந்த சில மாதங்களாக மக்களை சந்தித்து நிவாரண பொருட்கள் வழங்கி வந்தார். அதே சமயத்தில், கட்சி சார்பிலான போராட்டத்திலும் பங்கேற்றார். அப்படி பங்கேற்ற போராட்டத்தின் போது, தி.மு.க. நிர்வாகிகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் மூலமாக சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.வுக்கும் கொரோனா பரவியது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.வுடன் தொடர்பில் இருந்த தி.மு.க. நிர்வாகிகளின் விவரத்தை சுகாதாரத்துறையினர் சேகரித்து வருகிறார்கள். மேலும், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது.
அரசியல் பிரமுகர்கள் கலக்கம்
மேலும், சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. அதோடு சுரேஷ்ராஜனின் வீடு கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றப்பட்டு உள்ளது. அங்கு கிருமி நாசினி தெளித்தல் மற்றும் பிளச்சிங் பவுடர் தூவுதல் பணி தீவிரமாக நடந்தது. மக்கள் பணியில் ஈடுபட்ட ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.வை தொடர்ந்து, அடுத்த நாளே சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.வும் கொரோனா தொற்றுக்கு ஆளான சம்பவம் குமரி மாவட்ட அரசியல் பிரமுகர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. நடத்திய போராட்ட நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சியினரும் பங்கேற்றுள்ளதால் அவர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.