சாலையில் வேல் வரைந்தவர்களிடம் விசாரணை: போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு இந்து அமைப்பினர் போராட்டம் நிர்வாகி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
கோவையில் சாலையில் வேல் வரைந்ததாக 5 பேரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனால் போலீஸ் நிலையத்தை இந்து அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, நிர்வாகி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
போத்தனூர்,
கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியவர்களை கண்டித்து கோவையில் பல்வேறு இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிலர் தங்களின் வீட்டு சுவரிலும், சாலைகளிலும் வேல் வரைந்து, கந்தசஷ்டி கவசத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே கவுண்டம்பாளையம், தடாகம், கெம்பட்டி காலனி ஆகிய பகுதிகளில் சாலையில் வேல் வரைந்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, கோவை குனியமுத்தூர் பி.கே.புதூர் சத்யாநகர் பகுதியில் உள்ள சாலை யில் சிலர் வேல் வரைந்தனர்.
போலீஸ் நிலையம் முற்றுகை
இது தொடர்பாக இந்து அமைப்பை சேர்ந்த 5 பேரை குனியமுத்தூர் போலீசார் நேற்றுக்காலை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த பா.ஜனதா மாவட்ட தலைவர் நந்தகுமார், இந்து முன்னணி மாநில நிர்வாககுழு உறுப்பினர் குணா, மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால், விஸ்வ இந்து பரிஷத் மாநில இணை செயலாளர் அமர்நாத் சிவலிங்கம், ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் ராஜா உள்பட இந்து அமைப்பினர் பலர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். அவர்கள், விசாரணைக்காக அழைத்து வந்த 5 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
தீக்குளிக்க முயற்சி
மேலும் அவர்கள், போலீஸ் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து பஜனை பாடல்கள் மற்றும் கந்த சஷ்டி கவசம் பாடினார்கள். அப்போது விஸ்வ இந்து பரிஷத் மாநில இணைசெயலாளர் அமர்நாத் சிவலிங்கம் திடீரென்று பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கிருந்த போலீசார் அவரை தடுக்க முயன்றனர். இதனால் போலீசாருக்கும், முற்றுகையில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், அமர்நாத் சிவலிங்கத்தை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இதையடுத்து, இந்து அமைப்பினருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து, விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட 5 பேரையும் போலீசார் விடுவித்தனர். இதனால் அவர்கள் கலைந்து சென்றனர். இந்து அமைப்பினரின் போராட்டம் காரணமாக நேற்று காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை குனியமுத்தூர் போலீஸ் நிலைய வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.