முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள் - பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்
கோவையில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின. பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கினர்.
கோவை,
கொரோனா பரவலை தடுக்க இந்த மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கோவையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் கடந்த 25-ந் தேதி மாலை 5 மணி முதல் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை 36 மணி நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அவினாசி ரோடு, காந்திரம், டவுண்ஹால், திருச்சி ரோடு, பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு உள்ளிட்ட அனைத்து முக்கிய சாலைகளும் வெறிச்சோடின. மேம்பாலங்களில் ஏறும் இடத்தில் இரும்பு தடுப்பான்களை வைத்து அடைக்கப்பட்டு இருந்தன.
இதுதவிர மளிகை கடைகள், சந்தைகள், மீன் மார்க்கெட், இறைச்சி கடைகள், டீ கடைகள், நகை கடைகள், செல்போன் உதிரிபாக விற்பனை கடைகள், டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. மாவட்டத்தில் உள்ள 250 பெட்ரோல் விற்பனை நிலையங்களும் மூடப்பட்டன. ஆம்புலன்ஸ் மற்றும் அரசு வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் விற்பனை செய்யப்பட்டது.
உக்கடம் பஸ்நிலையத்தில் செயல்பட்ட தற்காலிக காய்கறி சந்தை உள்பட அனைத்து சந்தைகளும் மூடப்பட்டன. முழு ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடந்தனர். அத்தியாவசிய தேவைகளுக்கு சிலர் மட்டும் வெளியில் வந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். காரணம் இல்லாமல் வெளியே சுற்றியவர்களை பிடித்து போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்.
போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவதற்காக கோவை மாநகரில் 54 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. சில இடங்களில் இருசக்கர வாகனங்களில் வெளியே சுற்றிய நபர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்தனர். அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அதுபோன்று கோவை புறநகரில் 25 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. பாதுகாப்பு பணியில் 1,500-க்கும் மேலான போலீசார் ஈடுபட்டனர். முக்கிய இடங்களில் உயர் கோபுரம் அமைத்தும் போலீசார் கண்காணித்தனர். மேலும் கோவை மாநகரில் உள்ள 26 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் வருவதை தடுக்க மாவட்ட எல்லைப்பகுதியில் சாலைகளில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், இ-பாஸ் பெற்று வரும் வாகனங்களை மட்டுமே அனுமதித்தனர். மற்ற அனைத்து வாகனங்களும் திருப்பி அனுப்பப்பட்டன.