மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு: போக்குவரத்து இன்றி வெறிச்சோடிய சாலைகள்

தர்மபுரி மாவட்டம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியதால் சாலைகள் போக்குவரத்து இன்றி வெறிச்சோடின.

Update: 2020-07-27 05:37 GMT
தர்மபுரி, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் தமிழக அரசு ஊரடங்கை வருகிற 31-ந் தேதி வரை நீட்டித்துள்ளது. ஜூலை மாதத்தில் வரும் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி 4-வது ஞாயிற்றுக் கிழமையான நேற்று தர்மபுரி மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கை பொதுமக்கள் முறையாக கடைபிடித்தனர்.

தளர்வுகள் இல்லாத இந்த முழு ஊரடங்கையொட்டி பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர். இதனால் போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது கொரோனா நோய் தொற்று அதிக அளவில் பரவி வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது. சேலம்-பெங்களூரு 4 வழிச்சாலை, அதியமான்கோட்டை-ஓசூர் தேசிய நெடுஞ்சாலை, மஞ்சவாடி-வாணியம்பாடி மாநில நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளும் போக்குவரத்து இன்றி காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் அனைத்து வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் என அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. பால் மற்றும் மருந்து விற்பனை கடைகள் மட்டும் ஆங்காங்கே திறந்திருந்தன. எப்போதும் பரபரப்பாக செயல்படும் தொப்பூர் சுங்கச்சாவடி வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தர்மபுரி நகரில் முழு ஊரடங்கை பொதுமக்கள் முறையாக கடைபிடித்தனர். பஸ் நிலையங்களை சுற்றி உள்ள சாலைகளான நேதாஜி பைபாஸ்ரோடு, ஆறுமுக ஆசாரி தெரு, சின்னசாமிநாயுடு தெரு, முகமது அலி கிளப்ரோடு, பென்னாகரம் ரோடு, ராஜகோபால் கவுண்டர் தெரு, நாச்சியப்பகவுண்டர் தெரு மற்றும் 4 ரோடு, கடைவீதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன.

இந்த முழு ஊரடங்கால் பெரும்பாலான சாலைகள் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி கிடந்தது. நகரில் ஒரு சில இடங்களில் காலை நேரத்தில் பொதுமக்களுக்கு நேரடியாக வீட்டிற்கே சென்று இறைச்சி விற்பனை செய்யப்பட்டது. தர்மபுரி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டு கிடந்தன.

இதே போன்று பென்னாகரம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, ஏரியூர், காரிமங்கலம், மாரண்டஅள்ளி, கம்பைநல்லூர், நல்லம்பள்ளி, கடத்தூர், மொரப்பூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் முழு ஊரடங்கையொட்டி கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. போக்குவரத்து இன்றி அனைத்து கிராம சாலைகளும் வெறிச்சோடி கிடந்தது.

மேலும் செய்திகள்