4-வது முழு ஊரடங்கினால் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்கள் வெறிச்சோடியது

இந்த மாதத்தின் 4-வது முழு ஊரடங்கினால் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2020-07-26 22:15 GMT
பெரம்பலூர், 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் தற்போது 6-ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இந்த ஜூலை மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்காக தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 5, 12, 19-ந் தேதி என 3 ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டது. நேற்று ஜூலை மாதத்தின் 4-வது ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு நேற்று காலை 6 மணி முதல் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டது.

பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் முழு ஊரடங்கில் திறக்க அனுமதிக்கப்பட்ட பால் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகள், அம்மா உணவகங்கள் ஆகியவற்றை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் எப்போதும் பரப்பரப்பாக காணப்படும் பகுதிகளில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன. டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. முழு ஊரடங்கினால் வாகனங்கள் செல்லாததால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் பெரம்பலூர்- அரியலூர் மாவட்ட எல்லைகளில் போலீசார் சோதனை பணியிலும் மற்றும் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். முழு ஊரடங்கினால் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்