மரத்தில் கார் மோதல்; மின்வாரிய அதிகாரி உள்பட 3 பேர் பலி

மரத்தில் கார் மோதிய விபத்தில் மின்வாரிய அதிகாரி உள்பட 3 பேர் பலியானார்கள். உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்தது.

Update: 2020-07-26 22:07 GMT
தாம்பரம்,

செங்கல்பட்டு அடுத்த பி.வி.களத்தூர் கல்பட்டு அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 34). சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்தார். இவர், நேற்று முன்தினம் மாமல்லபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

பின்னர் தனது நண்பர்களான செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் பெத்தேல் நகரைச் சேர்ந்த அமல்ராஜ் (28) மற்றும் செங்கல்பட்டு அடுத்த மேலமையூரை சேர்ந்த ஸ்ரீதர் (51) ஆகியோருடன் காரில் வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார். இவர்களில் ஸ்ரீதர், ஆத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

3 பேர் பலி

திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஆசிரியர் நகர் அருகே சாலை வளைவில் திரும்பும்போது கண்ணனின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் உள்ள புளிய மரத்தில் பலமாக மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த கண்ணன் மற்றும் அமல்ராஜ் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஸ்ரீதர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் போலீசார் ஸ்ரீதரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீதரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

கண்ணன், அமல்ராஜ் ஆகியோரது உடல்களும் பிரேதபரிசே ாதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்