கார்கில் வெற்றி தினம்: போர் வீரர்கள் நினைவிடத்தில் கிரண்பெடி, நாராயணசாமி மரியாதை திடீரென நட்பு பாராட்டியதால் பரபரப்பு

கார்கில் வெற்றி தினத்தையொட்டி புதுவையில் போர் வீரர்கள் நினைவிடத்தில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர். அப்போது முதல்- அமைச்சருடன் திடீரென கவர்னர் நட்பு பாராட்டியது பர பரப்பை ஏற்படுத்தியது.

Update: 2020-07-26 21:50 GMT
புதுச்சேரி,

இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 1999-ம் ஆண்டு மே மாதம் 3-ந் தேதி முதல் ஜூலை 26-ந் தேதி வரை காஷ்மீர் மாநிலம் கார்கில் பகுதியில் போர் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், அதிகாரிகளும் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தனர். இதையொட்டி போரில் இந்தியா வெற்றி வாகை சூடியதை கொண்டாடும் வகையிலும், வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையிலும் ஆண்டுதோறும் ஜூலை 26-ந் தேதி கார்கில் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் புதுச்சேரி அரசு சார்பில் நேற்று 21-வது கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கடற்கரை சாலையில் பிரெஞ்சு தூதரகம் எதிரே அமைந்துள்ள கார்கில் போர் வீரர் நினைவிடத்தில் கவர்னர் கிரண்பெடி, முதல்- அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். சபாநாயகர் சிவக் கொழுந்து, முதல்-அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், மாவட்ட கலெக்டர் அருண், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலாளர் சுந்தரேசன் ஆகியோரும் கார்கில் போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதில் முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

பாராட்டு

இந்த நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பெடியும், முதல்- அமைச்சர் நாராயணசாமியும் சந்தித்து பேசிக் கொண்டனர். அப்போது சட்டபையில் சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்தமைக்கு நாராயணசாமிக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தார். மேலும் சரியான நேரத்தில் சட்டசபை கூட்டத்தை திறந்தவெளியில் மரத்தடியில் நடத்தியதற்காக சபாநாயகர் சிவக்கொழுந்துவுக்கும் கவர்னர் கிரண்பெடி வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘மக்களுக்காக அரசு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் மரத்தடியில் சட்டசபை கூட்டத்தை நடத்தியது என்றும் மறக்க முடியாத நிகழ்வாகும். இதுதான் நாடு முழுவதும் தற்போது வைரலாக பரவி வருகிறது. இப்படியொரு கூட்டம் புதுச்சேரி வரலாற்றில் இனி நிகழுமா? எனத்தெரியாது. இந்த புகைப்படம் வீடியோக்களை பத்திரமாக ஆவணம் செய்யுங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்’ என கூறிவிட்டு அங்கிருந்து கிரண்பெடி விடைபெற்றார்.

திடீர் நட்பால் பரபரப்பு

அமைச்சரவைக்கும், கவர்னருக்கும் பல்வேறு விவகாரங்களில் மோதல் இருந்து வந்தநிலையில் பட்ஜெட் தாக்கல் செய்வதிலும் எதிரொலித்தது. முதலில் கவர்னர் உரையை கிரண்பெடி புறக்கணித்த நிலையில் பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். இக்கட்டான சூழ்நிலையில் பட்ஜெட் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது.

சமூக வலைதளங்களில் கவர்னர் கிரண்பெடி இடமாற்றம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் உலா வரும் நிலையில் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்த கவர்னர், முதல்-அமைச்சருடன் திடீரென நட்பு பாராட்டியது புதுவை அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகள்