குமரியில் மேலும் 185 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 3,684 ஆக உயர்வு

குமரி மாவட்டத்தில் நேற்று 185 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 3,684 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-07-26 06:15 GMT
நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இவ்வாறு உயரும் பாதிப்பு எண்ணிக்கையும், கொரோனாவுக்கு பலியாகி வருபவர்களின் எண்ணிக்கையும் மாவட்ட மக்களை அச்சுறுத்தி வருகிறது.

மாவட்டத்தில் முதலில் ஒன்றை இலக்கத்திலும், பின்னர் இரட்டை இலக்கத்திலும் உயர்ந்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு இந்த மாத தொடக்கத்தில் இருந்து 100-க்கு மேல் 150 வரை உயர்ந்து கொண்டிருந்தது.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 200-க்கு மேல் அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 23-ந் தேதி ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 208 ஆக உயர்ந்தது. இதுதான் குமரி மாவட்டத்தின் உச்சபட்ச பாதிப்பு எண்ணிக்கையாக இருந்தது. அதேபோல் நேற்று முன்தினமும் குமரி மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 205 ஆக இருந்தது.

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி கொரோனா பரிசோதனை மையம் மூலம் 172 பேருக்கும், நாகர்கோவிலில் உள்ள தனியார் பரிசோதனை மையம் மூலம் 33 பேருக்கும் ஆக மொத்தம் 205 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதனால் 2-வது நாளாக குமரி மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,499 ஆகவும், சாவு எண்ணிக்கை 30 ஆகவும் உயர்ந்துள்ளது. இது ஏற்கனவே கலக்கத்தில் இருக்கும் மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியது.

இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் குமரி மாவட்டத்தில் 185 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. நாகர்கோவிலில் மட்டும் 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் குமரி மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,684 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்