குறிஞ்சிப்பாடி அருகே, பெண் அடித்துக் கொலை - குடும்ப தகராறில் கணவர் வெறிச்செயல்
குறிஞ்சிப்பாடி அருகே பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
குறிஞ்சிப்பாடி,
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி புவனகிரி சாலையில் வசித்து வந்தவர் ஜோதி (வயது 45). இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ஜோதி, குறிஞ்சிப்பாடி அண்ணாநகர் பைபாஸ் ரோட்டை சேர்ந்த ராமலிங்கம் மகன் மாயவேல்(39) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது.
குடிப்பழக்கம் உடைய மாயவேல் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் குடித்து விட்டு போதையில் வந்த மாயவேல், ஜோதியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர், ஜோதியை சரமாரியாக அடித்து உதைத்ததாக தெரிகிறது.
இதில் அவர் மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாயவேல், அவரை சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே ஜோதி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே ஜோதியின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வந்தது. அதில் ஜோதி தாக்கப்பட்டதால் தான் இறந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. அதன் பேரில் போலீசார் சந்தேக மரணம் என்பதை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து மாயவேலை கைது செய்தனர்.