இன்று முழு ஊரடங்கு : அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய கூட்டம் - போக்குவரத்து பாதிப்பு

இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் ஊட்டியில் நேற்று அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2020-07-25 22:15 GMT
ஊட்டி,

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தொற்று வேகமாக பரவுவதால் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி 4-வது ஞாயிற்றுக் கிழமையான இன்று நீலகிரி மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நீலகிரியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்கள் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் தற்காலிகமாக தடுப்புகள் வைத்து கண்காணிக்க உள்ளனர்.

முழு ஊரடங்கை ஒட்டி நேற்று ஊட்டி நகரில் அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. காய்கறிகள், மளிகை பொருட்கள், மருந்து, மாத்திரைகள், இறைச்சிகள் போன்றவற்றை வாங்க கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஏ.டி.சி. காந்தி விளையாட்டு மைதானத்தில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் காய்கறிகள் பழங்களை வாங்கினர். இன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்படுவதால், காய்கறிகள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டிய அவர்கள் நோய் தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளியை மறந்தனர். சில கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மக்கள் மற்ற கடைகளுக்கு சென்றனர். இருப்பினும் கடைகளில் மக்கள் கூட்டமாக நின்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் இருந்தது.

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளதால் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஊட்டியில் அத்தியாவசிய பொருட்களை வாங்க சுற்றுப்புற பகுதிகளில் இருந்து மக்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையோரத்தில் அனுமதிக்கப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடங்கள் நிரம்பி வழிந்தன. அதனால் பலர் தங்களது வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் சாலையோரத்தில் நிறுத்தி விட்டு சென்றனர். இதனால் நடந்து சென்று பொருட்களை வாங்கி வந்த மக்கள் நடக்க வழி இல்லாமல் அவதிப்பட்டனர்.

ஏ.டி.சி., மணிக்கூண்டு, கமர்சியல் சாலை, லோயர் பஜார், மாரியம்மன் கோவில் சந்திப்பு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நேற்று மதியம் 2 மணிக்கு பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால், அதன் பின்னர் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தது. இன்று முழு ஊரடங்கை அடுத்து மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் மூடப்படுகிறது. பால் மற்றும் மருத்துவ தேவையை தவிர்த்து வேறு காரணங்களுக்காக பொதுமக்கள் வெளியே வரக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்