தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய வழக்கில் முதல்-மந்திரி எடியூரப்பா விசாரணைக்கு ஆஜராக சம்மன் - கோகாக் கோர்ட்டு அதிரடி உத்தரவு

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்த வழக்கில் முதல்-மந்திரி எடியூரப்பா ஆஜராக கோரி சம்மன் அனுப்ப கோரி கோகாக் கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-07-25 23:35 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அதற்கு முன்பு குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடந்தது. இந்த கூட்டணி மீது அதிருப்தி அடைந்த 17 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அவர்களை தகுதிநீக்கம் செய்து அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து கூட்டணி ஆட்சி பெரும்பான்மை பலத்தை இழந்து கவிழ்ந்தது. மேலும் பா.ஜனதா ஆட்சி மலர்ந்தது.

இதைதொடர்ந்து மாஸ்கி, ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி தேர்தல் தொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் அந்த 2 தொகுதிகளை தவிர்த்து 15 தொகுதிகளுக்கு கடந்த ஆண்டு(2019) நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பெலகாவி மாவட்டம் கோகாக் தொகுதியில் முதல்-மந்திரி எடியூரப்பா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அவர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது. அதாவது கோகாக் தொகுதியில் வசிக்கும் வீரசைவ-லிங்காயத் சமுதாயத்தை முன்னிலைப்படுத்தி முதல்-மந்திரி எடியூரப்பா பேசி இருந்தார்.

இது தேர்தல் விதிமுறைகளை மீறியது என்று கூறி கோகாக் டவுன் போலீஸ் நிலையத்தில் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில், முதல்-மந்திரி எடியூரப்பா தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறவில்லை என்று கூறி, இந்த வழக்கு விசாரணை தொடர்பாக கோகாக் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கோகாக் டவுன் போலீசார் பி.அறிக்கை (ஆதாரங்கள் இல்லை) தாக்கல் செய்திருந்தனர். இதனை எதிர்த்து புகார் கொடுத்த நபர், கோகாக் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மீதான விசாரணை நேற்று முன்தினம் நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது முதல்-மந்திரி எடியூரப்பா மீதான வழக்கில் கோகாக் போலீசார் தாக்கல் செய்திருந்த பி.அறிக்கையை தள்ளுபடி செய்தார்.

அதே நேரத்தில் இந்த வழக்கில் முதல்-மந்திரி எடியூரப்பா நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கின் விசாரணை நவம்பர் மாதம் 23-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்