மராட்டியத்தில் பாதிப்பு 3 லட்சத்து 57 ஆயிரமாக உயர்வு: கொரோனாவில் இருந்து 2 லட்சம் பேர் குணமடைந்தனர் - ஒரே நாளில் 278 பேர் பலி

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 57 ஆயிரமாக உயர்ந்தது. அதில் சுமார் 2 லட்சம் பேர் குணமடைந்தனர். ஒரே நாளில் 278 பேர் உயிரிழந்தனர்.

Update: 2020-07-24 23:15 GMT
மும்பை,

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் 9 ஆயிரத்து 615 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 57 ஆயிரத்து 117 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 967 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 1 லட்சத்து 43 ஆயிரத்து 714 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் இதுவரை 17 லட்சத்து 87 ஆயிரத்து 306 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 19.98 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் மேலும் 278 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை மராட்டியத்தில் 13 ஆயிரத்து 132 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மும்பையில் நேற்று புதிதாக 1,057 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் நகரில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 980 ஆகி உள்ளது. இதேபோல மேலும் 54 பேர் பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 984 ஆக உயர்ந்து உள்ளது.

மும்பையை விட மாநிலத்தின் மற்ற பகுதிகளில் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. தானேயில் அடுக்குமாடி குடியிருப்புகளில் நோய் பாதித்தவர்கள் அதிகளவில் கண்டறியப்பட்டு வருகின்றனர். கல்யாண் - டோம்பிவிலியில் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இதேபோல புனே மாநகராட்சியில் நேற்று 2 ஆயிரத்து 11 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 47 ஆயிரத்து 457 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,203 பேர் பலியாகி உள்ளனர். இதேபோல பிம்பிரி சிஞ்வட்டில் மேலும் 973 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதித்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 256 ஆகி உள்ளது.

முக்கிய பகுதிகளில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் மற்றும் அடைப்புக்குறிக்குள் பலியானவர்கள் விவரம் வருமாறு:- தானே மாநகராட்சி - 18,609 (647 பேர் பலி), தானே புறநகர் - 11,842 (247), நவிமும்பை மாநகராட்சி - 14,495 (385), கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி - 20,249 (356), உல்லாஸ் நகர் மாநகராட்சி - 6,516 (121), பிவண்டி மாநகராட்சி - 3,604 (238), மிரா பயந்தர் மாநகராட்சி - 7,874 (255), வசாய் விரார் மாநகராட்சி - 10,685 (252), ராய்காட் - 7,523 (132), பன்வெல் மாநகராட்சி - 6,082 (125).

மேலும் செய்திகள்