கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் வெளிநாட்டு கப்பல்களில் டீசல் திருடிய 3 பேர் கைது - 43 ஆயிரம் லிட்டர் பறிமுதல்

கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் வெளிநாட்டு கப்பல்களில் டீசல் திருடி கள்ளச்சந்தையில் விற்று வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 43 ஆயிரம் லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2020-07-24 21:30 GMT
மும்பை,

மும்பை மஜ்காவ் பாவுச்சாதக்கா கடல் பகுதியில் படகில் டீசல் கடத்தி வருவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர்.

அப்போது அந்த வழியாக வந்த படகை போலீசார் சுற்றிவளைத்து நிறுத்தி சோதனை போட்டனர். இதில் படகுக்குள் ஏராளமான பிளாஸ்டிக் டிரம்களில் 43 ஆயிரம் லிட்டர் டீசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து படகில் இருந்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் படகில் இருந்தது திருட்டு டீசல் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கடலில் நிறுத்தப்பட்டு இருக்கும் வெளிநாட்டு கப்பல்களை குறிவைத்து டீசல் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் இதுபோல் டீசலை திருடி கள்ளச்சந்தையில் விற்று பணம் சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் படகில் இருந்த திருட்டு டீசலை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, படகின் மேற்பார்வையாளர் ராஜேஷ் குதே மற்றும் தேபாஷிஷ், இஸ்மாயில் ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்