காமராஜர் மண்டபத்துக்கு பெயர் மாற்றம்: காங்கிரசார் போராட்டத்தால் பரபரப்பு - அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமரசம்
காமராஜர் மண்டபத்துக்கு பெயர் மாற்றப்பட்டது தொடர்பாக காங்கிரசார் அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது.
நாகர்கோவில்,
நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் 1975-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பெயரில் ‘காமராஜ் மண்டபம் கட்டி திறக்கப்பட்டது. இங்கு ஆசாரிபள்ளம் பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆசாரிபள்ளம் பேரூராட்சி, நாகர்கோவில் நகராட்சியுடன் இணைக்கப்பட்டது. அப்போது ஆசாரிபள்ளம் பேரூராட்சி அலுவலகம் மேற்கு மண்டல பகுதியாக மாற்றப்பட்டு செயல்பட்டு வந்தது.
இந்தநிலையில் இந்த கட்டிடத்துக்கு வர்ணம் பூசும் பணி நடந்தது. அப்போது காமராஜ் மண்டபம் என்று இருந்த பெயரை அழித்துவிட்டு ‘நாகர்கோவில் மாநகராட்சி ஆசாரிபள்ளம் மேற்கு மண்டல அலுவலகம்’ என மாற்றி எழுதப்பட்டது. இது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்த தகவலை அறிந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் ராபர்ட் புரூஸ் தலைமையில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மண்டல தலைவர் ஜெயச்சந்திரன், காங்கிரஸ் வட்டார தலைவர் வைகுண்டதாஸ், நிர்வாகிகள் திருத்துவதாஸ், மகாதேவன்பிள்ளை மற்றும் பலர் அங்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கிருந்த அதிகாரிகளிடம் அந்த அலுவலகத்துக்கு காமராஜர் பெயரை மீண்டும் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு அதிகாரிகள் காமராஜர் பெயர் வைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட காங்கிரசார் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.