முன்விரோதத்தில் மருமகன், மாமனார் மீது பீர்பாட்டிலால் தாக்குதல் - வாலிபர் கைது; 3 பேருக்கு வலைவீச்சு

கொரடாச்சேரி அருகே முன்விரோதம் காரணமாக மருமகன், மாமனார் மீது பீர்பாட்டிலால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2020-07-23 22:30 GMT
கொரடாச்சேரி,

கொரடாச்சேரி அருகே உள்ள சாருவன் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் (வயது 28). அதே ஊரை சேர்ந்தவர் செந்தில்குமார். ஊரில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக செந்தில்குமார் தனது குடும்பத்துடன் தற்போது வெளியூரில் வசித்து வருகிறார். செந்தில்குமாருக்கும், தினேஷ் தரப்பினருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில் தினேஷ் தனது வீடு அருகில் மாமனார் ஜோதிபாசுவுடன் (45) பேசி கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த செந்தில்குமார் மற்றும் அவருடைய தம்பி ராஜ்குமார், உறவினர்கள் ஆகியோர் தினேசிடம் தகராறு செய்துள்ளனர். இதனை ஜோதிபாசு தட்டிக்கேட்டுள்ளார். தினேசுக்கு ஆதரவாக சாருவன் கிராமத்தினை சேர்ந்த பலரும் இதனை தட்டிக்கேட்டுள்ளனர்.

இதனால் பயந்துபோன செந்தில்குமார் மற்றும் அவரோடு வந்தவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த பீர் பாட்டில்களை வீசி தினேசை தாக்கியுள்ளனர். இதில் தினேஷ், ஜோதிபாசு ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்த மற்ற சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது படுகாயமடைந்த தினேஷ், ஜோதிபாசு இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தினேஷ் கொரடாச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் செந்தில்குமார், ராஜ்குமார், பாலு, சண்முகம் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சண்முகம் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். மற்ற 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்