பிளாஸ்மா தானம் பெறுவதற்காக தாராவியில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு

பிளாஸ்மா தானம் பெறுவதற்காக தாராவியில் கொரோனாவில் இருந்து குணமானவர்களிடம் இருந்து ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-07-23 23:06 GMT
மும்பை,

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பவர்களை காப்பாற்ற பிளாஸ்மா சிகிச்சை முறை கைகொடுத்து வருகிறது. எனவே மும்பை தாராவி மற்றும் மாலேகாவில் பிளாஸ்மா வங்கியை தொடங்க திட்டமிட்டு உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியிருந்தார். தாராவி, மாலேகாவில் அதிகம் பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர்.

இதில் தாராவியில் மட்டும் 2 ஆயிரத்து 121 பேர் பாதிப்பில் இருந்து குணமாகி இருக்கிறார்கள்.

இந்தநிலையில் நேற்று தாராவியில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமானவர்களிடம் ரத்த மாதிரி பெறப்பட்டது. தாராவி காமராஜர் பள்ளியில் நடந்த இந்த முகாமில் நேற்று 22 பேரிடம் மாதிரி சேகரிக்கப்பட்டது. இந்த முகாம் 5 நாட்கள் நடைபெறும் என அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் இதுகுறித்து ஜி வடக்கு வார்டு மாநகராட்சி அதிகாரி கிரன் திகாவ்கர் கூறியதாவது:-

சேகரிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளில் எந்த அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்று ஆய்வு செய்யப்படும். மேலும் யாருடைய ரத்த மாதிரி கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் அளவுக்கு எதிர்ப்பு சக்தி கொண்டது என்பது கண்டறியப்படும். அதன்பிறகு கண்டறியப்பட்ட நபர்களிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்