கொரோனா பரவலை தடுக்க உக்கடம் பஸ் நிலையத்துக்கு மீண்டும் காய்கறி சந்தை மாற்றம்

உக்கடம் லாரிப்பேட்டையில் இயங்கி வந்த தற்காலிக காய்கறி சந்தை கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உக்கடம் பஸ் நிலையத்துக்கு மீண்டும் மாற்றப்பட்டது.

Update: 2020-07-23 05:30 GMT
கோவை,

கோவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உக்கடம், ராமர் கோவில் வீதியில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தைகள் உக்கடம் பஸ் நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த ஜூன் மாதத்தில் பஸ் போக்குவரத்து சேவை தொடங்கியதால் இந்த தற்காலிக காய்கறி சந்தை லாரிப்பேட்டை பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனால் அங்கு பொதுமக்கள் சென்று காய்கறிகளை வாங்கிச்சென்றனர்.

இந்த நிலையில் லாரிபேட்டை பகுதியில் 60 வயது நபர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இதை தொடர்ந்து கொரோனா பரவலை தடுக்க லாரிபேட்டையில் இயங்கி வந்த தற்காலிக காய்கறி சந்தை, தற்போது மீண்டும் உக்கடம் பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் உக்கடம் பஸ்நிலையத்துக்கு சென்று காய்கறிகளை வாங்கிச்சென்றனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, தற்போது பொதுப்போக்குவரத்து இல்லை என்பதால் உக்கடம் பஸ்நிலையத்தில் சந்தை நடக்கிறது. போக்குவரத்து தொடங்கிய பின்னர் மீண்டும் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்படும்.

பொதுமக்கள் கூட்ட நெரிசலை குறைக்க இதுபோன்று நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அடிக்கடி சந்தை மாற்றப்படுவதால் சிரமமாக இருக்கிறது. எங்களுக்கு ராமர் கோவில் வீதியிலேயே காய்கறி சந்தையை அமைக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்றனர்.

மேலும் செய்திகள்