ஆதம்பாக்கத்தில் அம்மிக்கல்லை தலையில் போட்டு ரவுடி கொலை

ஆதம்பாக்கத்தில் அம்மிக்கல்லை தலையில் போட்டு ரவுடியை கொலை செய்த அவரது உறவினர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-07-21 01:34 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் ஆபீசர்ஸ் காலனி 5-வது தெருவை சேர்ந்தவர் அப்பு என்ற மணிகண்டன்(வயது 34). ரவுடியான இவர் மீது கொலை உள்பட பல வழக்குகள் உள்ளன. இவருக்கும், இவரது மாமா குட்டான் என்ற ஆபிரகாம் என்பவருடைய மகன் கார்க் என்ற எட்வின்(25) என்பவருக்கும் ஏற்கனவே சொத்து தொடர்பாக தகராறு உள்ளது.

நேற்று முன்தினம் மணிகண்டன், ஆதம்பாக்கம் மண்ணடியம்மன் கோவில் 2-வது தெருவில் உள்ள எட்வின் வீட்டுக்கு சென்றார். பின்னர் எட்வினுடன் சேர்ந்து மணிகண்டன் மது அருந்தினார். அப்போது எட்வினிடம், “உன் தங்கையை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்” என்று கூறினார். அதன்பிறகு எட்வின் வீட்டிலேயே மணிகண்டன் தூங்கிவிட்டார்.

நேற்று அதிகாலையில் எழுந்த எட்வின், சொத்து தொடர்பாக பிரச்சினையை ஏற்படுத்தி வரும் மணிகண்டன், தற்போது தனது தங்கையையும் திருமணம் செய்து வைக்க கேட்கிறான். தராவிட்டால் தன்னை கொலை செய்துவிடுவான் என பயந்து, அங்கிருந்த அம்மிக்கல்லை மணிகண்டன் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையிலான போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய எட்வினை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்