கொரோனா பாதித்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

வாணியம்பாடி பகுதியில் கொரோனா பாதித்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-07-21 00:45 GMT
வாணியம்பாடி,

வாணியம்பாடி பெரியபேட்டை, சென்னாம்பேட்டை ஆகிய பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் 27-ந்தேதியில் இருந்து நேற்று வரை மொத்தம் 42 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியை கடந்த 28 நாட்களாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து, பெரும்பாலான சாலைகள், தெருக்களில் தடுப்புகள் அமைத்து, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமலும், அன்றாட பணிகளை செய்ய முடியாமலும் சிரமப்பட்டு வந்தனர். 10-ந்தேதி அப்பகுதி மக்கள் கொரோனா தொற்று பாதித்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி 19-ந்தேதி தடுப்புகளை அகற்றுவதாக உறுதியளித்தனர்.

இந்த நிலையில் தொற்று பாதித்தவர்களில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 19-ந்தேதி தடுப்புகளை அகற்றுவதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்தும், அந்தத் தடுப்புகள் அகற்றப்படாமல் இருந்தன. அப்பகுதி தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக நீடித்ததால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த தாசில்தார் சிவப்பிரகாசம் மற்றும் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், அதிகாரிகளை சூழ்ந்து முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பதற்றம் நிலவியது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க அப்பகுதியைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள், பொதுமக்களை கட்டுப்படுத்துவதாக தெரிவித்தனர். அதன் பிறகு தடுப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் சிவப்பிரகாசம் உறுதி அளித்தார். அதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் மேற்கண்ட பகுதிகள் 4 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்