விழுப்புரம் நகரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அமைச்சர் திடீர் ஆய்வு

விழுப்புரம் நகரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2020-07-20 05:40 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பெரிய காலனி, காமராஜர் வீதி, கணபதி நகர், முத்தோப்பு, சித்தேரிக்கரை, கே.கே. சாலை போன்ற பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதோடு இவர்கள் வசித்த தெருக்கள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தடுப்புவேலிகள் அமைத்து, காவல்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்களுக்கு நகராட்சி ஊழியர்கள் மூலம் பால், மருந்து, காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.

ஆய்வு

இந்த நிலையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று மாலை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர், அங்கு பணியில் இருந்த நகராட்சி அதிகாரிகளிடம் கூறுகையில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தினந்தோறும் காலை, மதியம், மாலை ஆகிய 3 வேளை கிருமிநாசினி தெளிக்க வேண்டும். மேலும் அப்பகுதிகளில் வசிப்பவர்கள் மற்ற பகுதிகளுக்கு செல்லாமலும் மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு வராமலும் இருக்க தீவிரமாக கண்காணிப்பதோடு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தேவையான அத்தியாவசியப்பொருட்களை அவரவர் வீடுகளுக்கு நேரில்சென்று வழங்கவேண்டும். மேலும் நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி வாகனத்தின் மூலமாக கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது சம்மந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நோய் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் எனவும் உத்தரவிட்டார். முன்னதாக அமைச்சர் சி.வி.சண்முகம் பெரிய காலனி பகுதி மக்களுக்கு மளிகை, காய்கறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நிவாரண உதவியாக வழங்கினார். அப்போது கலெக்டர் அண்ணாதுரை, கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், கோட்டாட்சியர் ராஜேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம், சுகாதாரத்துறை டாக்டர் பாலு ஆகியோர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்