நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 78 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 486 ஆக உயர்வு

நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 78 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. பாதிப்பு 486 ஆக உயர்ந்து உள்ளது.

Update: 2020-07-20 03:52 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 410 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதில் 2 பேர் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டு பட்டியல் திருத்தம் செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு 408 இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 78 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதாவது தங்காடு ஓரநள்ளி கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கல்லட்டியை சேர்ந்த ஒரு பெண், குன்னூரை சேர்ந்த ஒரு ஆண், அதிகரட்டியை சேர்ந்த 4 ஆண்கள், ஒரு பெண், பிக்கோல் கிராமத்தை சேர்ந்த 2 பெண்கள். மேலூர் ஓசஹட்டியை சேர்ந்த ஒரு மூதாட்டி, ஓட்டுபட்டரையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோத்தகிரி கேர்பெட்டாவை சேர்ந்த ஒரு ஆண், தனியார் நிறுவன மக்கள் தொடர்பு அலுவலருடன் இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த காந்தலை சேர்ந்த ஒரு பெண், நஞ்சநாட்டைசேர்ந்த ஒரு பெண், குன்னூர் கறிமரயட்டியை சேர்ந்த 6 ஆண்கள், ஒரு பெண் ஆகியோருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. மும்பையில் இருந்து வருகை புரிந்தவருடன் இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த கெந்தொரையை சேர்ந்த 2 ஆண்கள், ஒரு பெண், கலிங் கட்டியை சேர்ந்த ஒரு பெண், ஒரு ஆண், மேல்தொரை யட்டியை சேர்ந்த 10 பெண்கள், 8 ஆண்கள் ஆவர்.

486 ஆக உயர்வு

மேலும் மருத்துவ சிகிச்சைக்காக கோவை சென்று திரும்பியவருடன் இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த கலிங்கட்டியை சேர்ந்த 2 பெண்கள், ஒரு ஆண், மோரிகல் கிராமத்தை சேர்ந்த ஒரு ஆண், கெந்தொரையை சேர்ந்த 4 ஆண்கள், 17 பெண்கள், உல்லாடாவை சேர்ந்த ஒரு பெண், வெலிங்டனை சேர்ந்த ஒரு மூதாட்டி, டிரைவர் பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர் பயணம் சென்று வந்த குன்னூர் மவுண்ட் பிளசண்ட் பகுதியை சேர்ந்த ஒரு ஆண் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 78 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இது புதிய உச்சம். இதனால் நீலகிரியில் பாதிப்பு 486 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 172 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். 312 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார். மேலும் கலெக் டர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இதனால் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்