மராட்டியத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 9,518 பேருக்கு கொரோனா - 258 பேர் பலி

மராட்டியத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 9 ஆயிரத்து 518 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 258 பேர் பலியானார்கள்.

Update: 2020-07-19 22:30 GMT
மும்பை, 

நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. அதாவது நாட்டில் பாதிக்கப்பட்டவர்களில் சுமாா் 30 சதவீதம் பேர் மராட்டியத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்தநிலையில் தொடர்ந்து இங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இதில் நேற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 9 ஆயிரத்து 518 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டுவதும் இதுவே முதல் முறையாகும்.

இதேபோல மாநிலத்தில் மேலும் 258 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை மராட்டியத்தில் 11 ஆயிரத்து 854 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். பலியானவர்கள் சதவீதம் 3.82 ஆக உள்ளது.

மாநிலத்தில் இதுவரை 3 லட்சத்து 10 ஆயிரத்து 455 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 569 பேர் குணமடைந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பிவிட்டனர். தற்போது 1 லட்சத்து 28 ஆயிரத்து 730 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் சதவீதம் 54.62 ஆக உள்ளது.

மாநிலத்தில் மொத்தம் 15 லட்சத்து 64 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 19.85 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 7 லட்சத்து 54 ஆயிரத்து 370 பேர் வீடுகளிலும், 45 ஆயிரத்து 846 பேர் தனிமை மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் ஊரகப்பகுதிகளிலும் நோய் தொற்று வேகமாக பரவி வருவது அரசுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மும்பையையொட்டி உள்ள பகுதிகள், புனே பகுதிகளில் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புனே மாநகராட்சி தொடர்ந்து பல நாட்களாக மும்பையை பின்னுக்கு தள்ளி பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் முதலில் இடத்தை பிடித்து வருகிறது. நேற்று அங்கு 1,812 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்து 620 ஆக அதிகரித்து உள்ளது.

இதேபோல அங்கு பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதுவரை அங்கு ஆட்கொல்லி நோய்க்கு 1,019 பேர் உயிரிழந்து உள்ளனர். இதேபோல நோய் பாதிப்பில் தானே மாநகராட்சியை, கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சி தாண்டி உள்ளது.

மராட்டியத்தில் மற்ற பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் மற்றும் அடைப்புக்குறிக்குள் பலியானவர்கள் விவரம் வருமாறு:-

தானே மாநகராட்சி - 17,226 (623 பேர் பலி), தானே புறநகர் - 10,503 (212), நவிமும்பை மாநகராட்சி - 12,929 (348), கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி - 18,115 (305), உல்லாஸ் நகர் மாநகராட்சி - 5,855 (96), பிவண்டி மாநகராட்சி - 3,310 (226), மிரா பயந்தர் மாநகராட்சி - 7,173 (226), வசாய் விரார் மாநகராட்சி - 9,549 (219), ராய்காட் - 6,078 (110),

பன்வெல் மாநகராட்சி - 5,335 (114). மாலேகாவ் மாநகராட்சி - 1,259 (85). நாசிக் மாநகராட்சி - 6,015 (194), பிம்பிரி சின்ஞ்வட் மாநகராட்சி - 10,507 (198), சோலாப்பூர் மாநகராட்சி - 3,867 (334), அவுரங்காபாத் மாநகராட்சி - 7,317 (330).

மேலும் செய்திகள்