நாசிக்கில், அணையில் மூழ்கி போலீஸ்காரர் உள்பட 3 பேர் பலி

நாசிக்கில் அணையில் மூழ்கி போலீஸ்காரர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

Update: 2020-07-19 22:30 GMT
நாசிக், 

நாசிக் சிட்கோ பகுதியை சேர்ந்த நண்பர்கள் 4 பேர் நேற்று நாகிக்கை அடுத்த ராய்காட்நகர் பகுதியில் உள்ள அணைக்கு சென்றனர். அங்கு சென்றதும் அவர்களில் ஒருவர் திடீரென தண்ணீரில் குதித்தார். பின்னர் அவர் அணையில் ஆழமான பகுதிக்கு நீந்தி சென்று உள்ளார். அப்போது தண்ணீரில் நிலைகொள்ள முடியாமல் மூழ்கினார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் 2 பேர் அவரை காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்தனர். ஆனால் துரதிருஷ்டவசமாக 3 பேரும் தண்ணீரில் மூழ்கிவிட்டனர்.

தனது நண்பர்கள் 3 பேர் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்குவதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த கரையில் நின்று கொண்டிருந்தவர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த இளம் நீச்சல் வீரர்களின் உதவியுடன் அணையில் குதித்து 3 பேரையும் தேடினர். நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு 3 பேரையும் போலீசார் பிணமாக மீட்டனர். பின்னர் அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையில், உயிரிழந்தவர்களில் ஒருவர் போலீஸ்காரர் என்பது தெரியவந்தது.

மேலும் செய்திகள்