கன்டெய்னரில் ரகசிய அறை அமைத்து 100 கிலோ கஞ்சா கடத்தல் 3 பேர் கைது

கன்டெய்னரில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

Update: 2020-07-19 21:52 GMT
பெரம்பூர்,

சென்னை வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி, உதவி கமிஷனர் ஜூலியஸ் சீசர் ஆகியோரின் மேற்பார்வையில் வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் புகாரி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 2 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. இதையடுத்து அவர், அளித்த தகவலின்பேரில் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பவுடர் ரவி என்ற ரவிச்சந்திரன் (வயது 36), பாம்பு நாகராஜ் என்ற நாகராஜ் (34), சின்னதுரை (37)ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அதில் ரவிச்சந்திரன் தலைமையில் இவர்கள் 3 பேரும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சில்லறை வியாபாரிகளுக்கு வினியோகம் செய்து வந்ததும், கஞ்சாவை வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு கடத்துவதற்கு சினிமா பாணியில் லோடு வேன்களில் உள்ள கன்டெய்னரில் ரகசிய அறை அமைத்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

கைதானவர்களிடம் இருந்து 100 கிலோ கஞ்சா, அவற்றை கடத்த பயன்படுத்தப்பட்ட ரகசிய அறையுடன் கூடிய லோடு வேன், ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களுடன் யார்? யார்? தொடர்பில் உள்ளார்கள். இதன் மொத்த வியாபாரி யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்