வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில், வங்கி ஊழியர்கள் உள்பட 144 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,816 ஆக உயர்வு
வங்கி ஊழியர்கள் உள்பட 144 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,816 ஆக உயர்ந்தது.
வேலூர்,
வேலூர் தொரப்பாடியில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் சிலருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்களுக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டன. அதன் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானதில் 3 வங்கி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து வங்கிக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. வங்கியில் பணிபுரிந்த ஊழியர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். வங்கி ஊழியர்கள் மற்றும் அந்த பகுதியில் சளி, இருமல் காணப்படும் நபர்களுக்கு சளிமாதிரி சேகரிகப்பட உள்ளது. வேலூர் சத்துவாச்சாரி கோர்ட்டில் பணிபுரிந்த 2 கோர்ட்டு ஊழியர்களுக்கு நேற்று முன்தினம் தொற்று உறுதியானது. இந்த நிலையில் நேற்று கோர்ட்டு நீதிபதி ஒருவரின் நேர்முக உதவியாளர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த நர்சு, ஊழியர்கள் உள்பட 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கொரோனாவினால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட சி.எம்.சி. ஊழியர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் 22 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
வேலூர் வசந்தபுரத்தில் பச்சிளம் ஆண்குழந்தை, பிஷப்டேவிட்நகரில் பச்சிளம் பெண்குழந்தை, கலாஸ் அதிமாறன் தெருவை சேர்ந்த 3 வயது ஆண்குழந்தை, ராஜீவ்காந்தி நகரில் 8 வயது ஆண்குழந்தை, சலவன்பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர், சத்துவாச்சாரியில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் உள்பட 4 பேர், வேலூர் அம்பேத்கர்நகரில் 11 பேர், சத்துவாச்சாரியில் 80 வயது முதியவர், மாநகராட்சி பகுதியில் 94 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 144 பேருக்கு ஒரேநாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை 3,816 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.