மராட்டியத்தில், கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது - உயிரிழப்பு 12 ஆயிரத்தை நெருங்கியது
மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி உள்ளது. உயிரிழப்பு 12 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
மும்பை,
சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி உள்ள ஆட்கொல்லி கொரோனா வைரஸ் மராட்டியத்தை புரட்டி போட்டு உள்ளது. இங்கு நோய் தொற்று காட்டுத்தீயாக பரவி வருகிறது. மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிற போதும் பாதிக்கப்பட்டவர்கள், பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் புதிதாக 8 ஆயிரத்து 348 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி உள்ளது. அதன்படி இதுவரை 3 லட்சத்து 937 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 663 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். அதவாது நோய் பாதித்தவர்களில் 55.05 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 1 லட்சத்து 23 ஆயிரத்து 377 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல மாநிலத்தில் மேலும் 144 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் மராட்டியத்தில் வைரஸ் நோய்க்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 956 ஆக அதிகரித்து உள்ளது. மாநிலத்தில் தொற்றுக்கு பலியானவர்கள் சதவீதம் 3.85 ஆக உள்ளது.
மராட்டியத்தில் ஆரம்பத்தில் தலைநகர் மும்பையில் தான் நோய் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தது. தற்போது வைரஸ் மாநிலத்தின் மற்ற பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது.
குறிப்பாக புனே, கல்யாண் டோம்பிவிலி, தானே பகுதிகளில் கொரோனா மிகப்பெரிய அச்சுறுத்தலாகி உள்ளது.
இதில் புனே மாநகராட்சி பகுதியில் கடந்த 5 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை மும்பையை தாண்டி உள்ளது. இதில் நேற்று அங்கு 1,589 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்து 808 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல 16 பலியானதால் அங்கு இதுவரை வைரஸ் நோய்க்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 994 ஆகி உள்ளது.
இதேபோல கல்யாண் டோம்பிவிலியில் புதிதாக 518 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்து 640 ஆக உயர்ந்து உள்ளது.