40 சதவீத ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள் பெங்களூருவில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை- மந்திரி சோமண்ணா பேட்டி
பெங்களூருவில் ஊரடங்கால் 40 சதவீத ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், எனவே ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் மந்திரி சோமண்ணா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நேற்று வீட்டுவசதித்துறை மந்திரி சோமண்ணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பெங்களூரு,
பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஒரு வாரம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. முதல்-மந்திரி எடியூரப்பா, அவருக்குள்ள அனுபவத்தின் மூலமாக ஒரு வாரம் ஊரடங்கு போதும் என்று முடிவு எடுத்துள்ளார். பெங்களூருவில் 40 சதவீத ஏழை மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தினமும் வேலை பார்த்து தான் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் 40 சதவீத ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஊரடங்கால் மட்டும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி விட முடியாது.
பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க அரசு அனைத்து விதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. முதல்-மந்திரி எடியூரப்பா கொரோனா பாதிப்பு ஏற்பட தொடங்கியதில் இருந்து தினமும் 18 மணிநேரம் ஓய்வில்லாமல் பணியாற்றி வருகிறார். மந்திரிகள், அதிகாரிகளும் இரவு, பகல் பார்க்காமல் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா பாதித்த பகுதிகளில் மட்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
பெங்களூருவில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு தனது சக்தியை மீறி பணியாற்றி வருகிறது. கொரோனா மற்றும் ஊரடங்கால் மக்கள் எந்த விதமான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்து தெரிவிக்கும்படி அனைத்து மந்திரிகளுக்கும் எடியூரப்பா உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி நான் ஹெப்பாலில் உள்ள 4 பகுதிகளுக்கு சென்று மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளை கேட்டு அறிந்து கொண்டுள்ளேன். மந்திரி ஸ்ரீராமுலு பேசியதை எதிர்க்கட்சிகள் பெரிதுப்படுத்துகின்றனர். அவர் பேசியதை தவறாக புரிந்து கொண்டு, மக்களிடையே தவறான தகவல் பரப்பப்படுகிறது. கொரோனாவில் இருந்து மக்களை கடவுள் காப்பாற்ற வேண்டும் என்று ஸ்ரீராமுலு வேண்டி உள்ளார். மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று ஒரு மந்திரி நினைப்பதில் எந்த தவறு இருக்கிறது.
இவ்வாறு மந்திரி சோமண்ணா கூறினார்.