ஈக்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி கோழிப்பண்ணை முன்பு கிராமமக்கள் போராட்டம்

தேன்கனிக்கோட்டை அருகே ஈக்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி நேற்று கிராமமக்கள் தனியார் கோழிப்பண்ணை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-07-18 07:24 GMT
தேன்கனிக்கோட்டை,

தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள ஏணிமுச்சந்திரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது. இந்த பண்ணையின் சுகாதார சீர்கேடுகளால் அங்கிருந்து லட்சக்கணக்கான ஈக்கள் வெளியேறி தினமும் கிராமத்திற்கு வருகின்றன. இந்த ஈக்கள் வீடுகளிலுள்ள உணவுப்பொருட்கள், கடைகளிலுள்ள பொருட்கள், ஆடு, மாடுகள், கோழிகள் மற்றும் பொதுமக்கள் அமரும் இடங்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் ஆக்கிரமிக்கின்றன. ஈக்களின் தொல்லையால் அந்த கிராமமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த கிராமத்தில் பரவும் ஈக்களை கட்டுப்படுத்த கோழிப்பண்ணை நிர்வாகத்தினர் மருந்துகளை மக்களுக்கு கொடுத்து கால்நடைகள் மீதும் சாலைகள், வீடுகளிலும் தெளிக்க செய்துள்ளனர். அவ்வாறு பொதுமக்கள் கால்நடைகள் மற்றும் கோழிகள் மீது மருந்து தெளித்தபோது கோழிகள் செத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் மருந்து தெளித்ததில் விவசாயி இலயப்பா என்பவருடைய பசுமாடு ஒன்றும் நேற்று செத்தது.

இதனால் கடும் ஆத்திரமடைந்த கிராமமக்கள், ஈக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோழிப்பண்ணை முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோழிப்பண்ணைக்கு தீவனம் ஏற்றி வந்த லாரியை தடுத்து நிறுத்தி செத்த மாட்டை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் வட்டார கால்நடை மருத்துவர் நிவேதிதா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதனைத்தொடர்ந்து கோழிப்பண்ணை நிர்வாகத்திடம் பேசி ஈக்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

மேலும் செய்திகள்