ரூ.935 கோடி மதிப்பில் கீழ்பவானி வாய்க்கால் சீரமைக்கப்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்

ரூ.935 கோடி மதிப்பில் கீழ்பவானி வாய்க்கால் சீரமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2020-07-18 04:21 GMT
ஈரோடு,

ஈரோட்டில் நேற்று ஆய்வுக்கூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா, புதிய திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா, நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் தொடக்க விழா ஆகியவை நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸ் தடுப்பு பணி சிறப்பான முறையில் நடந்து கொண்டு இருக்கின்றன. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 468 . சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 265 பேர். இறந்தவர்களின் எண்ணிக்கை 8 பேர். 15-7-2020 அன்றைய தினம் மட்டும் சிகிச்சை முடிந்து திரும்பியவர்கள் 73 பேர். தற்போது தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 195 பேர். 15-7-2020 அன்று வரை ஈரோடு மாவட்டத்தில் 57 ஆயிரத்து 737 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. 15-7-2020 அன்றைய தினம் மட்டும் பரிசோதனை செய்தவர்கள் 1,546 பேர். பரிசோதனை நிலையங்கள் 2 செயல்பட்டு வருகின்றன. நோய்வாய்ப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் 1,260 படுக்கைகள் தயாராக உள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. குடிமராமத்து திட்டம் என்கிற அற்புதமான திட்டத்தை அறிவித்து, பொதுப்பணித்துறையின் கீழ்வரும் ஏரி, குளங்கள், ஊராட்சித்துறையின் கீழ் வரும் ஏரி, குளங்கள் படிப்படியாக தூர்வாரப்பட்டு உள்ளன. கீழ்பவானி பாசன கால்வாயின் கரைகளை பலப்படுத்தவும், செயல்திறனை மேம்படுத்தவும் வேண்டும் என்று நீண்டகாலமாக விவசாயிகள், பொதுமக்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வைத்த கோரிக்கையை ஏற்று கீழ்பவானி பாசன திட்டத்தில் விவசாய பாசன இடைவெளியை குறைக்கவும், கசிவு நீர் வீணாவதை தடுக்கவும், கடைமடை வரை தண்ணீர் செல்லும் நிலையை உறுதிபடுத்தவும் ரூ.935 கோடி மதிப்பீட்டில் கீழ்பவானி வாய்க்காலை சீரமைக்கும் கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது.

மேட்டூர் மேற்கு கரை கால்வாயில் நீர்க்கசிவு ஏற்படுகிறது. அதை கட்டுப்படுத்த ரூ.65 கோடி செலவில் காங்கிரீட் கால்வாயாக உருவாக்கி இருக்கிறோம். நடப்பாண்டில் மேலும், ரூ.19 கோடி, இந்த கால்வாய் சீரமைப்புக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அத்திக்கடவு-அவினாசி திட்டம், விவசாயிகளின் கனவுத்திட்டம், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலத்தில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், அவர் மறைந்தாலும், அவருடைய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஜெயலலிதா அறிவித்தபடி செயல்திட்டம் தீட்டி, செயலாக்கத்துக்கு கொண்டு வந்திருக்கிறோம். பவானி ஆற்றின் குறுக்கே 7 தடுப்பணைகள் கட்ட ரூ.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

காலிங்கராயன் வாய்க்கால் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கால்வாயாக உள்ளது. கரைகள் பலம் இழந்து விட்டன. கசிவு அதிகமாக உள்ளது. இதனால் திறக்கப்பட்ட தண்ணீர் கடைகோடிக்கு முழுமையாக செல்வது இல்லை. எனவே எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு மற்றும் அமைச்சர்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்று இந்த அரசு ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்து காலிங்கராயன் வாய்க்கால் புனரமைப்பு பணிநடந்து வருகிறது. எஞ்சிய பகுதிகளில் வரும்காலத்தில் பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு புனரமைக்கப்படும்.

புகளூர் வாய்க்கால் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் புகளூர் வாய்க்கால் பகுதிகளில் ரூ.10 கோடி செலவில் பணிகள் செய்யப்படும். கோபி குண்டேரிபள்ளத்தில் கொள்ளளவை அதிகரிக்க ஆய்வுப்பணிக்காக ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. நீர் ஆதாரத்தை பெருக்க, நீர்வளம் நிலவளம் திட்டத்தின் மூலமாக மேட்டூர் வடிநில பகுதிகளில், மேட்டூர் கால்வாய் மற்றும் ஏரிகளை புனரமைக்கும் பணிகள் செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் ரூ.27 கோடியே 70 லட்சம் செலவில் பணிகள் நடந்து வருகின்றன.

கோபி தாலுகா கொங்கர்பாளையம் குண்டேரிபள்ளம் ஓடையில் 2 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெரும்பள்ளம் ஓடையின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படுகிறது. ஆக 3 தடுப்பணைகள் ரூ.7 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகிறது. கோபி மற்றும் பவானி தாலுகா பகுதிகளில் கீழ்பவானி பிரதான வாய்க்கால் கூகலூர் பகிர்மான கால்வாய் தொடக்கம் முதல் கடைமடை வரை ரூ.5 கோடியே 80 லட்சம் செலவில் புனரமைப்பு பணிகள் செய்ய நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட உள்ளது. கோபி தாலுகா அரக்கன்கோட்டை கால்வாய் மற்றும் கிளை வாய்க்காலில் ரூ.3 கோடியே 75 லட்சம் செலவில் வாய்க்கால் புனரமைப்புக்காக நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, விரைவில் ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் தொடங்கும்.

பெருந்துறை சட்டமன்ற தொகுதி மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.224 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுவரை ரூ.100 கோடி செலவிடப்பட்டு இருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை சட்டமன்ற தொகுதி, திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் இந்த திட்டத்தின் வாயிலாக பயன்பெறும். பெருந்துறை தொகுதியில் 7 பேரூராட்சிகள், 547 ஊரக பகுதிகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் தண்ணீர் கொடுக்கப்படும். இதுவரை 72 சதவீத பணிகள் முடிந்து உள்ளன. எஞ்சிய பணிகள் வேகமாகவும், துரிதமாகவும் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்காக கொண்டு வரப்படும்.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் மக்கள் வைத்து இருக்கும் கோரிக்கை மற்றும் எம்.எல்.ஏ.க்கள்., அமைச்சர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தில் இந்த ஊராட்சிக்கோட்டையில் இருந்து மாநகர் பகுதி மக்களுக்கு நிலையான பாதுகாக்கப்பட்ட காவிரி தண்ணீரை வழங்க, தனி குடிநீர் திட்டத்தை உருவாக்கி, அதற்காக ரூ.484.45 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் மிகவும் விரைவாக நடந்து வருகிறது. 95 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன. இன்னும் 2 மாத காலத்தில் எஞ்சிய 5 சதவீத பணிகளையும் முடித்து, ஈரோடு மாநகர் பகுதி மக்களுக்கு, சுற்றி இருக்கும் பகுதி மக்கள், வழியில் உள்ள பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட காவிரி தண்ணீர் வழங்கப்படும்.

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி சந்திப்பு பகுதியில் ரூ.58 கோடி செலவில் பிரமாண்டமான பாலம் கட்டி திறந்து வைக்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாநகரம் வளர்ந்து வரும் மாநகரம், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி (பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை) நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதுபோன்று ஏராளமான பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

கோபியில் புறவழிச்சாலை பணிகள் தொடங்கப்பட உள்ளன. பவானியில் புறவழிச்சாலை அமைக்க நிலம் எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஈரோடு திண்டல் முதல் கனிராவுத்தர் குளம் வரை பெருந்துறை ரோட்டினையும், சத்தி ரோட்டினையும் இணைக்கும் சாலையை அகலப்படுத்த ரூ.20 கோடியே 85 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணி நிறைவடைந்ததும், வாகனங்கள் நகர்பகுதிக்கு வராமல் புறநகர் பகுதிசாலையிலேயே பெருந்துறை, சத்தி ரோடுகளை அடைய முடியும்.

ஈரோடு மாநகர வெளிவட்ட சுற்றுச்சாலை (ரிங் ரோடு) பணிகள் நடந்து வருகின்றன. 815 மீட்டர் அளவுக்கு வழக்கு நடந்து வந்தது. அந்த நில உரிமையாளர்கள் அரசுக்கு கொடுக்க மறுத்த காரணத்தால் நீதிமன்றத்தின் மூலம் தீர்ப்பு பெற்று இருக்கிறோம். அதன்பேரில் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கி நிலத்தை கையகப்படுத்தி பணிகள் நிறைவடையும். இன்னும் 3 மாதத்தில் வெளி வட்ட சுற்றுச்சாலை பணிகள் நிறைவு செய்யப்படும்.

ஈரோடு-சித்தோடு 4 வழிச்சாலை ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு உள்ளது. இது நிறைவு பெற்றதும் 4 வழிச்சாலை பணிகள் தொடங்கும். சித்தோடு முதல் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வரை இந்த 4 வழிச்சாலை அமையும். தொப்பூர்-மேட்டூர்-பவானி-ஈரோடு சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டு உள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. ஈரோடு-பள்ளிபாளையம் புதிய பாலம் கட்டி திறக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல பெருந்துறை ரோடு காலிங்கராயன் இல்லம் முதல் திண்டல் மலைவரை உயர்மட்ட பாலம் அமைக்கப்பட இருக்கிறது.

இதுபோன்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தேவையான இடங்களில் வரும் காலங்கள் குளிர்பதன கிடங்குகள் அமைக்க அரசு ஆவன செய்யும்.

இவ்வாறு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு ஆவணப்படம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் அதிகாரிகள் தீவிர கொரோனா தடுப்பு பணி செய்து வருகிறார்கள். இதை ஆவணப்படுத்தும் வகையில், ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆவணப்படத்தை ஈரோட்டில் நடந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அப்போது மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்