அறச்சலூரில் ரூ.3 கோடி செலவில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

அறச்சலூரில் ரூ.3 கோடி செலவில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி வைத்தார்.

Update: 2020-07-18 04:06 GMT
ஈரோடு,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் நேற்று வளர்ச்சி திட்ட பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார்.

அதன்படி பள்ளிக்கல்வித்துறையில் ரூ.2 கோடியே 71 லட்சத்து 71 ஆயிரம் செலவில் அரசு பள்ளிக்கூடங்களில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள், குடிநீர் வசதி திட்டங்கள், செய்தி மக்கள் தொடர்புத்துறையில் ரூ.55 லட்சம் செலவில் ஓடாநிலையில் கட்டப்பட்ட தீரன்சின்னமலை கலையரங்க கட்டிடம், வேளாண்மைத்துறையில் எழுமாத்தூர், பெருந்துறை, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், சிவகிரி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.8 கோடியே 20 லட்சத்து 45 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட கட்டிடங்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.5 கோடியே 52 லட்சம் செலவில் அம்மாப்பேட்டை ஒன்றியம் மாத்தூர் ஊராட்சியில் அமைக்கப்பட்ட கூட்டுக்குடிநீர் திட்டம், பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ரூ.45 லட்சம் செலவில் சித்தோடு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடம், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.1 கோடியே 45 லட்சம் செலவில் கட்டப்பட்ட முதல்-அமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள், வருவாய்த்துறை சார்பில் ரூ.2 கோடியே 84 லட்சத்து 39 ஆயிரம் செலவில் நம்பியூர் தாலுகா அலுவலகம் மற்றும் தாசில்தார் குடியிருப்பு கட்டிடம் என மொத்தம் ரூ.21 கோடியே 73 லட்சத்து 59 ஆயிரம் செலவிலான வளர்ச்சித்திட்ட பணிகளை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ரூ.64 கோடி செலவில் ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரியை சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியாக (பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை) தரம் உயர்த்த 8 மாடி கொண்ட புதிய கட்டிடம், தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.3 கோடி செலவில் அறச்சலூரில் மஞ்சள் வணிக வளாகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க புதிய கட்டிடம், பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.8 கோடியே 17 லட்சத்து 82 ஆயிரம் செலவில் அரசு பள்ளிக்கூடங்களில் கட்டிடங்கள், குடிநீர் வசதி, வருவாய்த்துறை சார்பில் ரூ.84 லட்சத்து 40 ஆயிரம் செலவில் ஈரோடு, சிவகிரி, அவல்பூந்துறை, வாணிப்புத்தூர், பவானிசாகர் ஆகிய பகுதிகளில் புதிய கட்டிடங்கள், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ஓடாநிலையில் ரூ.10 லட்சம் செலவில் தீரன் சின்னமலைக்கு முழு உருவச்சிலை அமைத்தல் ஆகிய பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி வைத்து தொடங்கி வைத்தார்.

இதேபோல் வருவாய்த்துறை, மகளிர் திட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கூட்டுறவுத்துறை, மாவட்ட தொழில் மையம் ஆகிய துறைகள் சார்பில் 4 ஆயிரத்து 642 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்