மராட்டியத்தில், கூட்டணி ஆட்சியை கவிழ்க்க ‘ஆபரேஷன் தாமரை' திட்டம்? அமித்ஷாவை சந்தித்த பின் பட்னாவிஸ் பரபரப்பு பேட்டி
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை தேவேந்திர பட்னாவிஸ் திடீரென சந்தித்து பேசினார். அப்போது மராட்டிய கூட்டணி ஆட்சியை கவிழ்க்க ஆபரேசன் தாமரை திட்டம் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
மும்பை,
மராட்டியத்தில் கொள்கையில் முரண்பட்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பாரதீய ஜனதா எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து உள்ளது. அக்கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.
இந்தநிலையில், தேவேந்திர பட்னாவிஸ் நேற்று டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை திடீரென சந்தித்து பேசினார். அவருடன் பாரதீய ஜனதா தலைவர்கள் ஹர்ஷ்வர்தன் பாட்டீல், தனஞ்சய் மகாதிக், ரஞ்சித்சின் மோகிதே, ஜெய்குமார் கோர் எம்.எல்.ஏ., ரஞ்சித் நிம்பல்கர் எம்.பி. உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.
அமித்ஷா உடனான தேவேந்திர பட்னாவிசின் இந்த திடீர் சந்திப்பு மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்புக்கு பின் பட்னாவிஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உடனான இந்த சந்திப்பின் போது அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை. மராட்டியத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு நிதியுதவி கோருவது தொடர்பாக தான் பேசினோம்.
மாநிலத்தில் உள்ள கொரோனா வைரஸ் நிலைமை குறித்து அமித்ஷாவிடம் தெரிவித்தோம். அதுபற்றி பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டோம். மராட்டியத்தில் கொரோனாவை எதிர்த்து போராட வேண்டிய நேரமிது. மாநில ஆட்சியை கவிழ்க்க ‘ஆபரேஷன் தாமரை' திட்டம் இல்லை. ஏனெனில் இந்த கூட்டணி முரண்பாடுகளால் நிரம்பியுள்ளது என்று ஏற்கனவே தெரிவித்து உள்ளோம். எனவே அந்த முரண்பாடுகளாலேயே மராட்டிய அரசு கவிழும்.
இவ்வாறு அவர் கூறினார்.