மைசூரு நகரில் கொரோனா பதிப்பு அதிகம் உள்ள நரசிம்மராஜா, சாமராஜா தொகுதிகளில் முழு ஊரடங்கு அமல் - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

மைசூரு நகரில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நரசிம்மராஜா, சாமராஜா தொகுதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2020-07-17 22:00 GMT
மைசூரு, 

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தினம், தினம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவை கொரோனா தனது கட்டுக்குள் வைத்திருக்கிறது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு கொரோனா பாதிப்பும், அதனால் ஏற்படும் உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மைசூரு மாவட்டத்தில் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது. அதன்பிறகு சில நாட்கள் கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது கொரோனா 2-வது இன்னிங்சை தொடங்கி உள்ளது. அங்கு பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. மைசூருவில் இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மக்களை பீதியடைய செய்துள்ளது. இதற்கிடையே, கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூரு உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள மைசூரு மாவட்டத்தில் முழு ஊரடங்கு கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், மைசூரு மாவட்டத்திலும் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். மைசூருவில் முழு ஊரடங்கு அமல்படுத்த வலியுறுத்தி முன்னாள் மந்திரியும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான சா.ரா.மகேஷ், முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கும், மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகருக்கும் கடிதம் எழுதி உள்ளார்.

இந்த நிலையில், மைசூரு மாவட்டத்தில் முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தாமல், அதிகம் பாதிப்பு உள்ள பகுதிகளில் மட்டும் ஊரடங்கை அமல்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மைசூரு மாவட்டத்தை பொறுத்தவரை, மைசூரு நகரில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. மைசூரு நகரில் நரசிம்மராஜா சட்டசபை தொகுதிக்குட்பட்ட உதயகிரி, சாந்திநகர், கல்யாணகிரி, சுபாஷ்நகர், மண்டிமொகல்லா மற்றும் சாமராஜா சட்டசபை தொகுதியில் உள்ள கும்பார கொப்பலு, விஜயநகர், விஜயநகர் 3-வது ஸ்டேஜ் உள்ளிட்ட பகுதிகளில் தான் கொரோனா பாதிப்பும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது.

இதனால், மைசூரு நகரில் நரசிம்மராஜா, சாமராஜா சட்டசபை தொகுதிகளுக்கு மட்டும் ஒரு வாரம் முழு ஊரடங்கை அமல்படுத்தி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது நேற்று இரவு 8 மணி முதல் 27-ந்தேதி காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததால் நேற்று மாலையே இரு தொகுதிகளிலும் வாகன நடமாட்டம் குறைந்தது. உதயகிரி பகுதியில் சாலையின் குறுக்கே இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. இந்த ஊரடங்கு காலத்தில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை காய்கறி கடைகள், மருந்துக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடைகள் திறந்திருக்கும். அதன்பிறகு கடைகள் அடைக்க வேண்டும். தேவையின்றி வாகனங்கள் வெளியே சுற்றித்திரிய வேண்டாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மைசூரு நகர் முழுவதும் உள்ள அனைத்து டீ கடைகளையும் மூட மாநகராட்சி கமிஷனர் குருதத்தஹெக்டே உத்தரவிட்டுள்ளார். உத்தரவையும் மீறி டீக்கடைகளை திறந்தால், அதன் உரிமையாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். கடைகளின் உரிமமும் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்