இதுவரை 224 முறை விமான சேவை: மதுரைக்கு விமானங்களில் வந்த 97 பேருக்கு கொரோனா

வெளிநாடுகள், வெளி நகரங்களில் இருந்து இதுவரை மதுரைக்கு 224 முறை விமான சேவை நடைபெற்றிருக்கிறது. அதில் வந்த பயணிகளில் 97 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-17 23:00 GMT
மதுரை,

கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவை மே மாதம் 25-ந் தேதி தொடங்கியது. அதன்படி மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூரு, டெல்லி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு விமான சேவை நடைபெற்று வந்தது.

இதற்கிடையே கொரோனா அதிகரித்ததன் காரணமாக ஒரு சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்த சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு தற்போது சீராக நடைபெற்று வருகிறது. அதன் மூலம் மதுரையில் இருந்து தினமும், சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் இருந்து விமான சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுபோல் அபுதாபி, துபாய், சிங்கப்பூர், மாலத்தீவு, மஸ்கட், லெபனான் உள்ளிட்ட பல இடங்களிலிருந்து ஏராளமான தமிழர்கள் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் மதுரைக்கு அழைத்து வரப்படுகின்றனர். அதன்படி கடந்த மே மாதம் 25-ந் தேதி முதல் தற்போது வரை துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் 26 விமானங்கள் மதுரைக்கு வந்தன. அதில் 4 ஆயிரத்து 409 பேர் மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்ததில் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபோல் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்து இதுவரை 198 விமான சேவை நடை பெற்றிருக்கின்றன. அதில் 12 ஆயிரத்து 494 பேர் மதுரைக்கு வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவ்வாறு வந்தவர்களில் இதுவரை 72 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே வெளிநாடுகள் மற்றும் வெளி நகரங்களில் இருந்து மதுரைக்கு வருபவர்களில் வயதானவர்கள், கர்ப்பிணிகள் உடனடியாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவர்களை தவிர அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு பின்னர், தனியார் முகாம்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். அந்த வகையில் 250-க்கும் மேற்பட்ட நபர்கள் தனியார் விடுதி மற்றும் கொரோனா முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்