வெளியூருக்கு சென்று திரும்பிய 59 பேர் கொரோனா பரிசோதனைக்கு மறுப்பு நெல்லிக்குப்பம் அருகே பரபரப்பு

நெல்லிக்குப்பம் அருகே வெளிமாவட்டத்துக்கு சென்று திரும்பிய 59 பேர் கொரோனா பரிசோதனைக்கு மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-07-17 06:45 GMT
நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அருகே உள்ள மருதாடு கிராமத்தை சேர்ந்த 59 பேர், கரும்பு வெட்டும் வேலைக்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதிக்கு சென்றனர். அங்கு அவர்கள் தங்கியிருந்து வேலை பார்த்து விட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு வேனில் சொந்த ஊருக்கு திரும்பி வந்தனர்.

வெளிமாவட்டத்துக்கு சென்று விட்டு வந்ததால், அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற ஸ்டிக்கரை அதிகாரிகள் ஒட்டிச்சென்றனர். இந்த நிலையில் மருதாடு பகுதியை சேர்ந்த 59 பேரையும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக, அவர்களிடம் இருந்து உமிழ்நீர் எடுப்பதற்கு வருவாய்த்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் அழைத்தனர். ஆனால் அவர்கள் கடந்த 2 நாட்களாக பரிசோதனைக்கு வர மறுப்பு தெரிவித்தனர்.

பரபரப்பு

இதற்கிடையே நேற்று காலை கடலூர் தாசில்தார் செல்வகுமார் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரகுநாதன், கிராம நிர்வாக அலுவலர் ஓம்சத்திய சேகர், ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் ஆகியோர் அவர்களை மீண்டும் கொரோனா பரிசோதனைக்கு அழைத்தனர். அப்போது அவர்கள் நாங்கள் யாரும் பரிசோதனைக்கு வர மாட்டோம் என்று அதிகாரிகளிடம் கூறிவிட்டனர்.

அதற்கு அதிகாரிகள் பரிசோதனை செய்து கொள்ளவில்லையெனில் சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து 59 பேரும் பரிசோதனை செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தனர். அதன்படி அவர்களுக்கு மருதாடு அங்கன்வாடி மையத்தில் வைத்து உமிழ்நீர் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்