வையம்பட்டி அருகே பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை; தேர்வில் தோல்வி அடைந்ததால் பரிதாப முடிவு

வையம்பட்டி அருகே, தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2020-07-17 03:31 GMT
வையம்பட்டி,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள பழையகோட்டையை சேர்ந்தவர் முருகேசன். கூலித்தொழிலாளி. இவரது மகள் ரேணுகா (வயது 17). ஓந்தாம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த இவர், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வை எழுதியிருந்தார். நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவி ரேணுகா 2 பாடங்களில் தோல்வி அடைந்திருந்தார்.

சக தோழிகள் தேர்ச்சி பெற்ற நிலையில், தான் தோல்வி அடைந்ததை நினைத்து மன வருத்தத்தில் இருந்த ரேணுகா, நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மாணவியை மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா மற்றும் போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். பின்னர், மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வில் தோல்வி அடைந்ததால் பிளஸ்-2 மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்