தஞ்சை மாவட்டத்தில் வங்கி ஊழியர் உள்பட 25 பேருக்கு கொரோனா

தஞ்சை மாவட்டத்தில் மேலும் வங்கி ஊழியர் உள்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-17 03:27 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மேலும் 25 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் வங்கி ஊழியர் ஒருவரும், தனியார் மருத்துவமனை ஊழியர்கள் 4 பேரும் அடங்குவர்கள்.

நேற்று தொற்று உறுதியானவர்களில் கும்பகோணத்தை சேர்ந்த 8 பேரும், தஞ்சையை சேர்ந்த 6 பேரும், பட்டுக்கோட்டையை சேர்ந்த 3 பேரும், திருவிடைமருதூரை சேர்ந்த 4 பேரும், பாபநாசத்தை சேர்ந்த 2 பேரும், பூதலூர், மதுக்கூரை சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர். இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 835 ஆக அதிகரித்துள்ளது.

மாநகராட்சி அதிகாரி வீடு திரும்பினார்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் வல்லத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 30 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 465 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 353 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதில் தஞ்சை மாநகராட்சி மாநகர் நல அலுவலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று குணமடைந்ததையடுத்து வீடு திரும்பினார். அவருக்கு கலெக்டர் கோவிந்தராவ் பழங்கள் மற்றும் சான்றிதழ் கொடுத்து வழியனுப்பி வைத்தார்.

பலி 13 ஆக அதிகரிப்பு

இந்த நிலையில் பட்டுக்கோட்டையை சேர்ந்த 74 வயது முதியவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்