காளையார்கோவில் அருகே மாமியார், மருமகளை கொன்ற கும்பலை பிடிக்க 5 தனிப்படை

காளையார்கோவில் அருகே மாமியார், மருமகளை கொன்ற கும்பலை பிடிக்க 5 சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2020-07-16 08:33 GMT
காளையார்கோவில்,

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள முடுக்கூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தியாகு. இவர் முன்னாள் ராணுவ வீரர்.

இவரது மனைவி ராஜகுமாரி(வயது60), மருமகள் சினேகா(30) ஆகியோரை மர்மநபர்கள் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிப்பதற்காக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) வருண்குமார் கூறியதாவது:-

காளையார்கோவில் அருகே மாமியார், மருமகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கொள்ளையர்கள் சிக்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இந்த இரட்டைக்கொலைக்கு முன்பாக காளையார்கோவில் அருகே மறவமங்கலம் பகுதியில் உள்ள ஒரு கடையில் திருட்டு நடைபெற்றுள்ளது. எனவே அந்த கடையில் திருடியவர்களுக்கு, இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சினேகாவின் கணவரான ராணுவ வீரர் ஸ்டீபனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அங்கிருந்து வந்து கொண்டிருக்கிறார். அவர் வந்தவுடன் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மாமியார், மருமகள் உடல்களை ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்