சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் துணிகர கொள்ளை - காரில் வந்து பொருட்களை அள்ளிச்சென்றனர்

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் பூட்டிக்கிடந்த வீடுகளை உடைத்து பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. காரில் வந்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2020-07-16 00:25 GMT
சென்னை, 

சென்னை ராஜாஅண்ணாமலைபுரம், 1-வது மெயின் ரோட்டில் ரமணா அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் முதல் மாடியில் பூட்டிக்கிடந்த 3 வீடுகளை உடைத்து அதற்குள் கொள்ளையர்கள் புகுந்து நகை-பணம் மற்றும் பொருட்களை அள்ளிச் சென்று விட்டனர். பின்னர் அதே தெருவில் தனியாக உள்ள 2 வீடுகளில் பொருட்கள் திருடப்பட்டுள்ளது.

அதன்படி டாக்டர் சாருகேஷ் என்பவர் வீட்டில் 1 செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணமும், அஞ்சலை முகர்ஜி என்ற பெண் வீட்டில் நகை மற்றும் ரொக்கப்பணமும், சுப்பிரமணியம் என்பவரது வீட்டில் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள ‘லேப்டாப்’ உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களும், ராமகிருஷ்ணன் என்பவரது வீட்டில் சிறிய அளவில் பொருட்களும், மணிகண்டன் என்பவரது வீட்டில் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ரொக்கப்பணமும் கொள்ளைப் போனது

இந்த சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். கொள்ளையர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டது. அந்த பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து பார்த்தனர். அதில், கொள்ளையர்கள் 3 பேர் காரில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட் களை ஏற்றிச்சென்ற காட்சி பதிவாகி உள்ளது.

இதை அடிப்படையாக வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த கொள்ளைச் சம்பவம் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்