கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு எதிரொலி: பெங்களூருவில் மக்கள் வீட்டிற்குள் முடங்கினர் - பஸ்-ஆட்டோக்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின
கொரோனாவை கட்டுப்படுத்த பெங்களூரு உள்பட 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பஸ், ஆட்டோ, வாடகை கார்கள் எதுவும் ஓடவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பெங்களூருவில் மக்கள் வீட்டிற்குள் முடங்கினர்.
பெங்களூரு,
இதுவரை 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் 935 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். குறிப்பாக பெங்களூருவில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருவதுடன், சாவு எண்ணிக்கையும் அதிவேகமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக பெங்களூரு நகர வாசிகள் பீதி அடைந்துள்ளனர். இதையடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவில் இருந்து வருகிற 22-ந் தேதி அதிகாலை 5 மணிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூருவை போன்று பெங்களூரு புறநகர், கலபுரகி, தார்வார், யாதகிரி ஆகிய 4 மாவட்டங்களிலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் அத்தியாவசிய பொருட்கள் கடைகள் திறக்க மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கும் நேர கட்டுப்பாடுகளை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு மற்றும் பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 5 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை காய்கறி, பால், மளிகை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, காலையில் இருந்து மதியம் வரை மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். 12 மணிக்கு பிறகு நகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மருந்தகங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மட்டுமே திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஓட்டல்களில் பார்சல்களுக்கு அனுமதி அளித்திருந்தாலும், வாடிக்கையாளர்கள் வருகை வெகு குறைவாக தான் இருந்தது. இதன் காரணமாக நகரில் ஏராளமான ஓட்டல்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பல ஓட்டல்கள் திறக்கப்படவே இல்லை.
பெங்களூருவில் அரசு பஸ்கள், கார்கள், ஆட்டோக்கள் ஓடாததால் நகரின் பெரும்பாலான சாலைகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அரசு அலுவலகங்கள், டாக்டர்கள், நர்சுகளுக்காக குறைந்த அளவிலான பஸ்கள் இயக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தார்கள். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தங்களது நிறுவனத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை காண்பித்து தங்களுடைய சொந்த வாகனங்களில் பணிக்கு சென்றனர். அவர்களுக்கு போலீசாரும் அனுமதி வழங்கினார்கள்.
இதன் காரணமாக நகரில் 12 மணிக்கு மேல் தேவையில்லாமல் சுற்றி திரிந்தவர்களை பிடித்து, அவர்களை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அதே நேரத்தில் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றியவர்கள் மீது போலீசார் தடியடியும் நடத்தினார்கள். அத்துடன் தேவையில்லாமல் சுற்றியவர்களிடம் இருந்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. பெங்களூருவில் நேற்று ஒரே நாளில் கார், மோட்டார் சைக்கிள் உள்பட 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நகரில் 12 மணிக்கு பின்பு திறந்திருந்த கடைகளை போலீசார் அடைக்க செய்தார்கள். உயர் போலீஸ் அதிகாரிகள் தங்களது பகுதிகளில் ரோந்து சென்று நிலைமை கண்காணித்தனர்.
12 மணிக்கு பின்பு கடைகள் அடைக்கப்பட்டதாலும், வாகனங்கள் நடமாட்டம் குறைந்ததாலும் நகரில் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அதே நேரத்தில் ஊரடங்கு காரணமாகவும், கொரோனா பீதியிலும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல், வீட்டிற்குள்ளேயே முடங்கினார்கள். பெங்களூருவில் நேற்று முதல் நாள் ஊரடங்கு, மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெற்றி பெற்றுள்ளது. இனிவரும் 6 நாட்களும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் என்று போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூருவை தவிர தார்வார், கலபுரகி, யாதகிரி, பெங்களூரு புறநகர் மாவட்டங்களிலும் ஊரடங்கு காரணமாக கடைகள் திறக்கப்படாததாலும், பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாததாலும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மக்களும் கொரோனா பீதியில் வீடுகளுக்குள்ளேயே முடங்கினார்கள்.
இந்த 5 மாவட்டங்கள் தவிர பெலகாவியில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோகாக் உள்பட 5 தாலுகாக்களிலும், ராய்ச்சூர் மாவட்டத்தில் ராய்ச்சூர் மற்றும் சிந்தனூர் தாலுகாக்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.